நாங்கள் இரவு உணவு அருந்துகையில், என் ஒன்பது வயது பேரன் புன்னகையுடன், “நான் பாட்டியைப் போலவே இருக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன்!” என்றான். அவன் வார்த்தைகள் என் மனதை மகிழ்வித்தது. அவன் உடல்நலம் குன்றி, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த முந்தைய வருடத்தை நான் மீண்டும் நினைத்தேன். அவன் நன்றாகத் தூங்கிய பிறகு, நாங்கள் அருகருகே அமர்ந்து ஒன்றாகப் படித்தோம். புத்தகங்களை நேசிக்கும்படி என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மரபை நான் அவனுக்குக் கடத்துவதில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் என் பேரக்குழந்தைகளுக்கு நான் கடத்த விரும்பும் மிக முக்கியமான மரபு அதுவல்ல. என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற விசுவாசத்தின் மரபையே மற்றும் என் பிள்ளைகளுக்குக் கடத்த முயல்கிறேன், அது என் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் விசுவாசத்தை நோக்கிய பயணத்தில் உதவும் என்று நான் ஜெபிக்கிறேன்.
தீமோத்தேயு ஒரு ஆவிக்குரிய தாய் மற்றும் பாட்டியின் மரபைக் கொண்டிருந்தார். மேலும் ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியான அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அப்போஸ்தலன், “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5) என்றெழுதினார்.
நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க போதுமானதாக இல்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நமக்குக் கடத்தப்பட்ட மரபு தீமையானதாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அல்லது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் விசுவாசத்தின் மரபை உருவாக்கக் காலம் கடந்து போகவில்லை. தேவனின் உதவியால், நாம் விசுவாச விதைகளை விதைக்கிறோம். விசுவாசத்தை வளரச் செய்பவர் அவரே (1 கொரிந்தியர் 3:6-9).
உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி எப்படிப்பட்ட ஆவிக்குரிய சொத்தை விட்டுச் சென்றார்கள்? நீங்கள் நேசிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் விசுவாச மரபை எவ்வாறு உருவாக்குவீர்கள் என்று நம்புகிறீர்கள்?
பரலோகத் தகப்பனே, என்னை உம்மிடமாக இழுத்துக் கொண்டதற்காக நன்றி. பிறருக்கு தேவபக்தியான முன்மாதிரியாக இருக்க எனக்கு உதவும்.