நெதர்லாந்தின் ரோர்மாண்டில் உள்ள புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க கல்லறைகளுக்கு இடையில் நீண்டு கிடக்கும் பழைய செங்கல் சுவரை சுற்றி நீங்கள் உலாவினால், ஒரு வினோதமான காட்சியைக் காண்பீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும், சுவருக்கு எதிராக ஒரே மாதிரியான இரண்டு உயரமான கல்லறை தலைக்கற்கள் நிற்கின்றன, ஒன்று புராட்டஸ்டன்ட் கணவருக்கும் மற்றொன்று அவரது கத்தோலிக்க மனைவிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலாச்சார விதிகளின்படி அவர்கள் தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டவிதியை ஏற்கவில்லைபோல; அவர்களின் வழக்கத்திற்கு மாறான தலைக்கற்கள் வேலியிடப்பட்ட தடைக்கு மேலே செல்லும் அளவுக்கு உயரமாக இருப்பதால், மேலே ஒரு அல்லது இரண்டு அடி காற்று இடைவெளி மட்டுமே அவர்களைப் பிரிக்கும். ஒவ்வொன்றின் மேலுள்ள ஒரு கை சிற்பம் மற்றொன்றைத் தொடும், ஒருவருக்கொருவர் கரம் பிடித்துக் கொள்கின்றன. மரணத்திலும் தம்பதிகள் பிரிந்து வாழ மறுத்தனர்.
உன்னதப்பாட்டு அன்பின் வலிமையை விளக்குகிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (8:6) என்று சாலொமோன் கூறுகிறார். மெய்யான அன்பு ஆற்றல் வாய்ந்தது, மூர்க்கமானது. “அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” (வ.6). மெய்யான அன்பு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, ஊமையாக்கப்படாது, அழிக்கப்படவும் முடியாது. சாலொமோன் எழுதுகிறார்: “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது” (வ.7).
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:16). நமது வலிமையான அன்பு, அவர் நம்மீது கொண்ட கொடிதான அன்பின் உடைந்த பிம்பம் மட்டுமே. உண்மையான எந்த அன்பிற்கும், பற்றிப்பிடிக்கும் எந்த அன்பிற்கும் அவர்தான் மெய்யான ஆதாரம்.
தேவனின் வலிதான அன்பை நீங்கள் எவ்வாறு அனுபவித்து வருகிறீர்கள்? உங்கள் மீதுள்ள வலுவான அன்பை அவர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
அன்பு தேவனே, மரணத்தைக் காட்டிலும், தீமையைக் காட்டிலும், எனது தோல்விகளைக் காட்டிலும் வலிமையான உமது அன்பு எனக்குத் தேவை. உமது வல்லமையான அன்புக்கு நன்றி.