ஸ்டான்லி ஒரு தனியார் வாடகை வாகன ஓட்டுநராக வேலை செய்வதிலுள்ள சுதந்திரம் மற்றும் சௌகரியம் அவருக்கு பிடித்திருந்தது. பல வசதிகள் மத்தியில், அவர் எப்போது வேண்டுமானாலும் வேலையைத் தொடங்கலாம் மற்றும் நிறுத்தலாம், மேலும் அவர் தனது நேரத்தையும் பணிகளையும் குறித்து யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதில்லை. இருப்பினும், நேர்மாறாக அது தான் கடினமான பகுதி என்று அவர் கூறினார்.
“இந்த வேலையில், திருமணத்திற்குப் புறம்பான கள்ள உறவை வளர்ப்பது மிகவும் எளிதானது. நான் பல வகையான பயணிகளை அழைத்துச் செல்கிறேன். ஆனால், என் மனைவி உட்பட யாருக்கும் நான் ஒவ்வொரு நாளும் எங்கே இருக்கிறேன் என்று தெரியாது” என்று அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது எதிர்ப்பதற்கு எளிதான சலனம் அல்ல, மேலும் அவரது சக ஓட்டுநர்கள் பலர் அதற்கு அடிபணிந்துள்ளனர் என்று அவர் விளக்கினார். “தேவன் என்னைக்குறித்து என்ன நினைப்பார், என் மனைவி எப்படி உணருவாள் என்று நிதானிப்பதே என்னைத் தடுக்கிறது” என்றும் அவர் கூறினார்.
நம் ஒவ்வொருவரையும் படைத்த நம் தேவன்; நமது பலவீனங்கள், ஆசைகள் மற்றும் நாம் எவ்வளவு எளிதில் சோதிக்கப்படுகிறோம் என்பதை அறிவார். ஆனால், 1 கொரிந்தியர் 10:11-13 நமக்கு நினைவூட்டுவது போல, நாம் அவரிடம் உதவி கேட்கலாம். “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” என்று பவுல் கூறுகிறார். அந்த “தப்பிக் கொள்ளும்படியான போக்கு” என்பது விளைவுகளைப் பற்றிய ஆரோக்கியமான பயம், உணர்வுள்ள மனசாட்சி, வேத வசனங்களை நினைவில் கொள்வது, தக்க சமயத்தில் கவனச்சிதறல் அல்லது வேறு ஏதாவது இருக்கலாம். நாம் தேவனிடம் பெலனைக் கேட்கும்போது, ஆவியானவர் நம்மைச் சோதிக்கும் விஷயங்களிலிருந்து நம் கண்களைத் திருப்பி, அவர் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பான வழியை நோக்கிப் பார்க்க உதவுவார்.
இன்று நீங்கள் என்ன சோதனைகளை எதிர்கொள்கிறீர்கள்? அவருடைய சரியான மற்றும் பரிசுத்தமான பாதையில் நடக்கத் தேவன் உங்களுக்கு எத்தகைய "போக்கை" ஏற்படுத்துகிறார்?
தகப்பனே, நீர் என் பலவீனங்களை அறிவீர். சோதனையை எதிர்ப்பதற்கும், உமது பரிசுத்தமான மற்றும் ஜீவன் தரும் பாதைகளில் உம்முடன் நடக்கவும் எனக்குப் பெலன் தாரும்.