சர்வதேச விருந்தினர்களின் கலாச்சாரங்களைக் கொண்டாட எங்கள் சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் இரவு விருந்தில், மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடல் குழுவினர், பாரம்பரியமான கிறிஸ்துமஸ் பாடலான “லைலத் அல்-மிலாத்”தை, தர்புகா (ஒரு வகை மேளம்) மற்றும் ஊட் (நரம்பு இசைக்கருவி) ஆகியவற்றின் இசையுடன் பாடிட, நான் மகிழ்ச்சியுடன் கைதட்டினேன். இசைக்குழுவின் பாடகர், பாடல் தலைப்பின் பொருள் “நேட்டிவிட்டி நைட் (இயேசுவின் பிறப்பிடத்தின் இரவு)” என்று விளக்கினார். கிறிஸ்துமஸின் உற்சாகமே தாகத்தால் வாடுபவருக்குத் தண்ணீர் வழங்குதல் அல்லது அழுகிறவருக்கு ஆறுதல் அளித்தல் போன்று பிறருக்குச் சேவை செய்வதிலேயே உள்ளதென்று இப்பாடல் வரிகள் கேட்பவர்களுக்கு நினைவூட்டுகின்றன.

அவர்: தான் பசியாயிருந்தபோது உணவளித்தது, தாகமாயிருந்தபோது தண்ணீர் கொடுத்தது, நோய்வாய்ப்பட்டு தனிமையிலிருந்தபோது தோழமையையும் பராமரிப்பையும் அளித்தது என்று, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் தமக்காகவே செய்த செயல்களென்று பாராட்டும் ஒரு உவமையிலிருந்து  (மத்தேயு 25:34-36) இந்தக் கிறிஸ்துமஸ் பாடலின் கருத்து எடுக்கப்பட்டிருக்கலாம். இயேசுவின் பாராட்டுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்த உவமையில் கூறப்பட்டவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்; அவர்கள் உண்மையில் கிறிஸ்துவுக்காக இதைச் செய்யவில்லை என்று நினைக்கிறார்கள். அவரோ, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ.40) என்று பதிலளித்தார்.

விடுமுறைக் காலத்தில், பண்டிகை மனப்பான்மையைக் கொண்டிருப்பதே  கிறிஸ்துமஸ் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக பொதுவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் “லைலத் அல்-மிலாத்”, பிறர் மீது கரிசனை கொள்வதே உண்மையான கிறிஸ்துமஸ் உற்சாகத்தைச் செயல்படுத்தும் முறை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, நாம் அவ்வாறு செய்யும்போது, ​​நாம் பிறருக்கு மட்டுமல்ல, இயேசுவுக்கும் ஊழியம் செய்கிறோம்.