இயேசுவின் இளம் விசுவாசியாக, நான் எனது புதிய அனுதின தியானங்கள் உள்ளடங்கிய வேதாகமத்தை எடுத்து ஒரு பிரசித்தமான வசனத்தைப் படித்தேன்: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத்தேயு 7:7). விளக்கவுரையில், நமது சித்தம் அவருடைய சித்தத்துடன் இசைவாக இருக்க வேண்டும் என்பதைத் தான் உண்மையில் தேவனிடம் கேட்கவேண்டும் என்று இருந்தது. அவருடைய சித்தம் நிறைவேற நாடுவதின் மூலம், நாம் கேட்டதைப் பெறுவோம் என்று உறுதிக்கொள்ளலாம். இது எனக்கு ஒரு புதிய கருத்தாக இருந்தது, தேவசித்தம் என் வாழ்வில் செய்யப்படும்படி நான் ஜெபித்தேன்.
பின்னர் அதே நாளில், ஆச்சரியப்படும்படி நான் ஏற்கனவே என் மனதில் நிராகரித்த ஒரு வேலை வாய்ப்பைப் குறித்து மீண்டும் ஆர்வமடைந்தேன். மேலும் எனது ஜெபமும் எனக்கு நினைவூட்டப்பட்டது. ஒருவேளை, நான் விரும்பாதது என் வாழ்க்கைக்கான தேவசித்ததின் ஒரு பகுதியாக இருக்கலாம். நான் தொடர்ந்து ஜெபித்து, இறுதியில் அந்த வேலையை ஏற்றுக்கொண்டேன்.
இதைக்காட்டிலும் ஆழமான மற்றும் நித்திய முக்கியத்துவம் வாய்ந்த வேளையில், இயேசு இதை நமக்கு முன்மாதிரியாக்கினார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு வழிவகுத்த காட்டிக்கொடுப்பு மற்றும் கைதுக்கு முன், அவர் ஜெபித்தார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42). அவர் உடல் மற்றும் உணர்வு ரீதியான வேதனையை எதிர்கொண்டபோது, கிறிஸ்துவின் ஜெபம் கடுந்துயராலும் தாங்கொணா வேதனையாலும் நிரம்பியிருந்தது (வ. 44). ஆயினும்கூட, தேவசித்தம் நிறைவேற அவரால் இன்னும் “ஊக்கமாக” ஜெபிக்க முடிந்தது.
என் வாழ்க்கையில் தேவசித்தமே எனது குறிக்கோளான ஜெபமாக மாறியுள்ளது. இதன் பொருள், எனக்கு வேண்டும் அல்லது தேவை என்று எனக்குத் தெரியாத காரியங்களுக்குக் கூட நான் தகுதியானவனாக இருக்கலாம். நான் முதலில் விரும்பாத வேலையே, கிறிஸ்தவ பதிப்பு வெளியீட்டில் எனது பயணத்தின் தொடக்கமாக மாறியது. திரும்பிப் பார்க்கும்போது, தேவசித்தம் நிறைவேறியதாகவே நான் நம்புகிறேன்.
உங்கள் இதயத்தில் உள்ள ஜெப விண்ணப்பம் என்ன? தேவன் உங்களை என்ன செய்யுமாறு அழைக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
பரலோகப் பிதாவே, உமது சித்தத்தைச் செய்ய எனக்கு வழிகாட்டிடும்.