எங்கள் குழந்தைப்பருவ கதைப் புத்தகத்தை என் சகோதரி கண்டுபிடித்தபோது, இப்போது எழுபதுகளில் இருக்கும் என் அம்மா மகிழ்ச்சியடைந்தார். தேனைத் திருடிய கரடியைக் கோபமான தேனீக் கூட்டம் துரத்திய கதையின் அனைத்து வேடிக்கையான சம்பவங்களும் அவருக்கு நினைவிலிருந்தன. மேலும், கரடி தப்பிப்பிழைப்பதை எதிர்பார்த்து நானும் என் சகோதரியும் எவ்வாறு சிரித்தோம் என்பதையும் அவள் நினைவு கூர்ந்தாள். “நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எப்பொழுதும் கதைகளைச் சொன்னதற்காக நன்றி” என்று நான் என் அம்மாவிடம் சொன்னேன். சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பது உட்பட எனது முழு கதையும் அவளுக்குத் தெரியும். இப்போது நான் வளர்ந்த பின்னும், அவள் இன்னும் என்னை அறிந்திருக்கிறாள், புரிந்துகொள்கிறாள்.
தேவனும் நம்மை அறிவார். நம்மைக் காட்டிலும், எந்த மனிதனைக் காட்டிலும் ஆழமாக அறிவார். அவர் நம்மை, “ஆராய்ந்து அறிந்திருக்கி(றார்)றீர்” (சங்கீதம் 139:1) என்று தாவீது கூறுகிறார். தமது அன்பினால் அவர் நம்மை ஆராய்ந்து, நம்மை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். தேவன் நம் நினைவுகளை அறிவார், நாம் வார்த்தைகளின் காரணங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்கிறார் (வ. 2, 4). நம்மை நாமாக்கும் ஒவ்வொரு காரணிகளையும் அவர் அந்தரங்கமாக அறிந்தவர், மேலும் நமக்கு உதவ இந்த அறிவை பயன்படுத்துகிறார் (வ. 2-5). நம்மை அதிகம் அறிந்தவர் வெறுத்து விலகாமல், தமது அன்புடனும் ஞானத்துடனும் நம்மை நெருங்குகிறார்.
நாம் தனிமையானவராக, கண்டுகொள்ளப்படாதவராக அல்லது மறக்கப்பட்டவராக உணரும்போது, தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நம்மைக் காண்கிறார், நம்மை அறிவார் என்ற சத்தியத்தில் நாம் இடரற்றிருக்க முடியும் (வ. 7-10). பிறர் அறியா நமது அனைத்து பக்கங்களையும், இன்னும் பலவற்றையும் அவர் அறிவார். தாவீதைப் போலவே நாமும் நம்பிக்கையுடன், “நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். . . . . உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வ. 1, 10) எனலாம்.
உங்களை மிகவும் நெருக்கமாக அறிந்த ஞானமும் அன்பும் கொண்ட தேவனால் நீங்கள் எவ்வாறு ஊக்கம் பெறுகிறீர்கள்? அவருடைய அன்பான பிரசன்னத்தை நீங்கள் எவ்வாறு பிறருடன் பகிர முடியும்?
அன்பு தேவனே, நீர் என்னை நன்கு அறிந்தவர், என்னை மிகவும் நேசிக்கிறவர். என் வாழ்வின் மீதிருக்கும் உமது கரத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.