Archives: நவம்பர் 2024

அளவிடமுடியா இரக்கம்

இரண்டு நண்பர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் மடிக்கணினி வாங்கச் சென்றபோது, ​​அவர்கள் கூடைப்பந்து ஜாம்பவான் ஷாகில் ஓ'நீலை சந்தித்தனர். ஓ'நீல், சமீபத்தில்தான் தனது சகோதரி மற்றும் தனது முன்னாள் சக வீரரின் இழப்பை அனுபவித்தார் என்பதை அறிந்திருந்த அவர்கள், பரிவுணர்வோடு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். பின்னர் இருவரும் கடைக்குத் திரும்பிய பிறகு, ஷக் அவர்களை அணுகி, அவர்களுக்கான சிறந்த மடிக்கணினியைத் தெரிவு செய்யும்படி சொன்னார். பின்னர் அவர் அதை அவர்களுக்காக வாங்கினார், ஏனெனில் அவர்கள் அவரை ஒரு கடினமான நேரத்தைக் கடக்கும் ஒரு நபராகப் பார்த்ததினால், அவர்களின் இரக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

அந்த சந்திப்பிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சாலொமோன், "தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்" (நீதிமொழிகள் 11:17) என எழுதினார். பிறரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது, ​​நாமும் பலனடைகிறோம். இது வெறும்  மடிக்கணினியோ  அல்லது மற்ற பொருட்கள் பற்றினதோ மட்டுமல்ல, ஆனால் இந்த உலகம் அளவிட முடியாதபடி தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளார், "நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்" (வ.16) என்று சாலொமோன் அதே அத்தியாயத்தில் முன்பு ஒரு வசனத்தை விளக்கியது போல். தேவனிடம் பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள பரிசுகள் உள்ளன, மேலும் அவர் தனது பரிபூரண ஞானத்திலும் வழிமுறைகளில் அவற்றைத் தாராளமாக அளந்து பகிர்கிறார்.

இரக்கமும் பெருந்தன்மையும் தேவனின் சுபாவத்தை ஒரு பகுதியாகும், ஆகவே அவை நம் சொந்த உள்ளங்களிலும் வாழ்க்கையிலும் வெளிப்படுவதைக் காண அவர் விரும்புகிறார். சாலொமோன் இந்த காரியத்தை இரத்தின சுருக்கமாக : "எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (வ. 25) என்றார்.

ஒரு கைப்பிடி அரிசி

வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலம் மெல்ல மெல்ல வறுமையிலிருந்து மீண்டு வருகிறது. அவர்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், நற்செய்தி முதன்முதலில் இந்தப் பகுதிக்கு வந்ததிலிருந்து, இயேசுவின் விசுவாசிகள் "கைப்பிடி அரிசி" என்று அழைக்கப்படும் உள்ளூர் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உணவைச் சமைப்பவர்கள், ஒரு பிடி சமைக்காத அரிசியை ஒதுக்கி சபைக்குக் கொடுக்கிறார்கள். மிசோரம் சபைகள், உலகத் தரத்தில் ஏழ்மையானவை, ஆனால் மிஷனரிகளுக்கு இலட்சகணக்கான பணத்தை வழங்கியுள்ளன மற்றும் உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்பியுள்ளன. தங்கள் சொந்த மாநிலத்திலும் பலர் கிறிஸ்துவிடம் வழி நடத்தப்பட்டுள்ளனர்.

2 கொரிந்தியர் 8 இல், பவுல் இதேபோன்ற சவாலுக்குட்பட்ட சபையை விவரிக்கிறார். மக்கெதோனியாவில் உள்ள விசுவாசிகள் ஏழைகளாக இருந்தனர், ஆனால், அது அவர்களை மகிழ்ச்சியுடனும் ஏராளமாகவும் கொடுப்பதைத் தடுக்கவில்லை (வ. 1-2). அவர்கள் கொடுப்பதை ஒரு பாக்கியமாகக் கருதி, பவுலுடன் பங்காற்ற "தங்கள் திராணிக்கு மிஞ்சியும் " (வ. 3) கொடுத்தார்கள். தாங்கள் தேவனுடைய வளங்களின் உக்கிராணக்காரர் மட்டுமே என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். நமது எல்லா தேவைகளையும் சந்திக்கும் அவர் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டும் ஒரு வழியாகக் கொடுத்தல் இருந்தது.

கொடுத்தலில் அதே அணுகுமுறையுடன் கொரிந்தியர்கள் இருக்கும்படி ஊக்குவிக்க, பவுல் மக்கெதோனியர்களை மாதிரியாக பயன்படுத்தினார். கொரிந்தியர்கள் “விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும்.. அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும்" பெருகி யிருந்தார்கள். இப்போது அவர்கள் "இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்" (வ.7)..

மக்கெதோனியர்கள் மற்றும் மிசோரமில் உள்ள விசுவாசிகளைப் போல நாமும் நம்மிடம் உள்ளதைத் தாராளமாகக் கொடுப்பதன் மூலம் நம் தகப்பனின் உதாரகுணத்தைப் பிரதிபலிக்க முடியும்.

நம் சத்துருவை நேசித்தல்

இரண்டாம் உலகப் போரின் போது, ​​அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் படை வீரர் லின் வெஸ்டன், எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தீவுகளைத் தாக்கியபோது கடற்படையினருடன் கரைக்குச் சென்றார். தவிர்க்க முடியாமல், பயங்கர உயிரிழப்புகள் ஏற்பட்டன. காயமுற்ற வீரர்களை வெளியேற்ற, அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவரது படையினர் மோசமான வயிற்றுக் காயத்துடன் இருந்த எதிரி வீரனைச் சந்திக்க நேர்ந்தது. காயத்தின் தன்மை காரணமாக, அவனுக்குத் தண்ணீர் கொடுக்க இயலவில்லை. அவனை உயிருடன் காப்பாற்ற, சிறிய அதிகாரியான வெஸ்டன், நரம்பு வழியாக பிளாஸ்மாவை (இரத்தத் திரவம்) செலுத்தினார்.

"அந்த பிளாஸ்மாவை நம் ஆட்களுக்குச் சேமித்து வை, ஸ்வாபி(மாலுமி)!" என்று கடற்படை வீரர்களில் ஒருவன் கத்தினான். கடைநிலை அதிகாரி வெஸ்டன் அவனைப் புறக்கணித்தார். இயேசு என்ன செய்வார் என்பதை அவர் அறிந்திருந்தார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்" (மத்தேயு 5:44). இயேசு, அந்த சவாலான வார்த்தைகளில் சொன்னதைக் காட்டிலும் அதிகம் செய்தார்; அவர் அதனை வாழ்ந்து காட்டினார். அவரை பகைத்த கூட்டம், அவரைப் பிடித்து, பிரதான ஆசாரியனிடம் அழைத்துச் சென்றபோது, ​​"இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்(தனர்)து" (லூக்கா 22:63). போலியான நியாயவிசாரணைகள் மற்றும் மரணதண்டனை மூலம் அவர்களின் துஷ்பிரயோகம் தொடர்ந்தது. இயேசு அதைச் சகிக்க மட்டும் செய்யவில்லை, ரோமானிய வீரர்கள் அவரை சிலுவையில் அறைந்தபோது, ​​அவர்களின் மன்னிப்புக்காக ஜெபித்தார் (23:34).

நம்மை உண்மையாகக் கொல்ல முயலும் எதிரியை நாம் சந்திக்காமலிருந் திருக்கலாம். ஆனால் ஏளனத்தையும், பரியாசத்தையும் சகிப்பது எப்படிப்பட்டதென்று அனைவரும் அறிவோம். கோபத்தில் பதிலளிப்பதே நமது இயல்பான எதிர்வினை. ஆனால், "உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) என்று இயேசு மாற்றியமைத்தார்.

இன்று, இயேசு செய்ததைப் போல, நம் எதிரிகளிடமும் கருணை காட்டி, அத்தகைய அன்போடு வாழ்வோம்.

தேவன் உன்னைக் காண்கிறார்

ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி, கைகளை அசைத்த தன் மகனிடம், என் தோழி "கீழே இறங்கு" என்று சற்றே அதட்டினாள். "போதகர் என்னைப் பார்க்க வேண்டும். நான் நிற்காவிட்டால், அவர் என்னைப் பார்க்க மாட்டார்" என்று அவன் வெகுளியாகப் பதிலளித்தான்.

ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி  நிற்பதை பெரும்பாலான தேவாலயங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றாலும், என் தோழியின் மகனுடைய கருத்து ஏற்புடையதே. நின்று, கைகளை அசைப்பது நிச்சயமாகப் போதகரின்  பார்வையையும், கவனத்தையும் ஈர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

நாம் தேவனின் கவனத்தைப் பெற முயலுகையில், ​​அவரால் கவனிக்கப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் நம் ஒவ்வொருவரையும் எப்போதும் பார்க்கிறார். ஆகார், தன் வாழ்வில் மிகத் தாழ்ந்த, தனிமையான, மிகவும் விரக்தியான நேரத்தில் இருக்கையில், ​​அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தியவரும் அவரே. அவள் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு, ஒரு குமாரனைப் பெறும்படியாக ஆபிராமுக்கு அவனுடைய மனைவி சாராயால் கொடுக்கப்பட்டிருந்தாள்  (ஆதியாகமம் 16:3). அவள் கருவுற்றபோது, ​​ஆகாரை தன் மனைவி  தவறாக நடத்த ஆபிராம்  அனுமதித்தார்: “அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்” (வ.6).

ஓடிப்போன அடிமை தன்னை ஒண்டியாகவும், கர்ப்பமாகவும், பரிதவிக்கத்தக்கவளாகவும் கண்டாள். ஆயினும், வனாந்தரத்தில் அவளது விரக்தியின் மத்தியில், தேவன் மனமுருகி அவளிடம் பேச ஒரு தூதனை அனுப்பினார். தேவதூதன் அவளிடம், “கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்(ட்டார்)டபடியினால்” (வ.11) என்றார். அவள், "நீர் என்னைக் காண்கிற தேவன்" (வ.13) என்று பதிலளித்தாள்.

வனாந்தரத்தின் மத்தியில், இது மிகப்பெரும் புரிதலாகும். தேவன் ஆகாரைக் கண்டு இரக்கம் கொண்டார். நிலைமை எவ்வளவு கடினமான இருந்தாலும், அவர் உங்களைப் பார்க்கிறார்.

அன்போடு ஊழியஞ்செய்தல்

கீதா முதன்முதலில் சென்னையில் காபி கடையில் வேலையைத் தொடங்கியபோது, ​​​​அவள் மாலா என்ற வாடிக்கையாளருக்குச் சேவை செய்தாள். மாலா காது கேளாதவர் என்பதால், அவர் தனது தொலைப்பேசியில் தட்டச்சு செய்யப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்தார். மாலா ஒரு வழக்கமான வாடிக்கையாளர் என்பதை கீதா அறிந்த பிறகு, போதுமான சைகை மொழியைக் கற்று, அவருக்குச் சிறப்பாகச் சேவை செய்யத் தீர்மானித்தாள், அதனால் அவர் அதை எழுதாமலேயே ஆர்டர் செய்யலாம்.

ஒரு எளிய முறையில், கீதா மாலாவுக்கு  அன்பையும் சேவையையும் காட்டினாள். இதையே பேதுரு, ஒருவருக்கொருவர் வழங்க நம் அனைவரையும் ஊக்குவிக்கிறார். சிதறடிக்கப்பட்ட மற்றும் நாடுகடத்தப்பட்ட இயேசுவின் விசுவாசிகளுக்கு எழுதிய நிருபத்தில், "ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்" என்றும், தங்கள் ஈவுகளைப் பயன்படுத்தி "ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (1 பேதுரு 4:8, 10) என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகிறார். தேவன் நமக்கு அளித்திருக்கும் தாலந்துகள் மற்றும் திறன்கள் எதுவாக இருந்தாலும், அவை பிறருக்கு நன்மை செய்ய நாம் பயன்படுத்தக்கூடிய ஈவுகளே. அவ்வாறு  செய்யும்போது, ​​நம் வார்த்தைகளும் செயல்களும் தேவனுக்கு கனத்தைச் சேர்க்கும்.

பேதுருவின் வார்த்தைகள், அவர் எழுதியவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, காரணம் அவர்கள் வேதனையும் தனிமையும் நிறைந்த காலத்தை அனுபவித்தனர். துன்பத்தின் போது ஒருவரையொருவர் தங்கள் சோதனைகளைச் சமாளிக்க, ஒருவருக்கொருவர் உதவுமாறு அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். மற்றொரு நபர் அனுபவிக்கும் குறிப்பிட்ட வலியை நாம் அறியாவிட்டாலும், நம்முடைய வார்த்தைகள், நம்மிடம் உள்ளவை மற்றும் நமது திறன்கள் மூலம் ஒருவரையொருவர் கருணையோடும் மகிழ்ச்சியோடும் சேவிக்கத் தேவன் நமக்கு உதவுவார். அவருடைய அன்பின் பிரதிபலிப்பாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்யத் தேவன் நமக்கு உதவிடுவாராக.