தேர்வில் எனக்கு 84 மதிப்பெண் கிடைத்தது! என் வாலிப மகளின் குறுஞ்செய்தியை என் அலைபேசியில் படித்த போது அவளது உற்சாகத்தை உணர்ந்தேன். அவள் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினாள், மதிய உணவு இடைவெளியில் அவளுடைய அலைபேசியைப் பயன்படுத்தினாள். என் மகள் ஒரு சவாலான தேர்வில் சிறப்பாகச் செய்ததால் மட்டுமல்ல, அதை என்னிடம் தெரிவிக்க அவள் விரும்பியதால் என் அம்மாவின் இதயம் துள்ளியது. அவள் தன்னுடைய நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாள்!
அவளுடைய செய்தி எனது நாளை மகிழ்ச்சியாக்கியதை உணர்ந்து, நான் தேவனை அணுகும்போது அவர் எவ்வாறு உணர கூடும் என்று நான் பின்னர் சிந்தித்தேன். நான் அவருடன் பேசுகையில் அவர் மகிழ்வாரா? ஜெபம் என்பது நாம் தேவனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதும், “இடைவிடாமல்” (1 தெசலோனிக்கேயர் 5:17) செய்யச் சொல்லப்பட்ட ஒன்றுமாகும். அவருடன் பேசுவது, நன்மை தீமையில் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் நம்மைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் நம் காரியங்களைத் தேவனுடன் பகிர்வது நம் கவனத்தைத் திசைதிருப்பி, அவரைப் பற்றிச் சிந்திக்க உதவுகிறது. ஏசாயா 26:3 கூறுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” நாம் தேவனிடமாய் கவனத்தைத் திரும்புகையில், நமக்குச் சமாதானம் காத்திருக்கிறது.
நாம் எதை எதிர்கொண்டாலும், தேவனுடன் தொடர்ந்து பேசி, நம் சிருஷ்டிகரும் இரட்சகருமானவருடன் இணைப்பில் இருப்போமாக. ஒரு ஜெபத்தை முணுமுணுத்து, “நன்றி செலுத்தவும்”, மகிழ்ச்சி கொள்ளவும் மறவாதிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பவுல் கூறுகிறார், இது நம்மைக் குறித்து “தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 5:18).
நீங்கள் தேவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? உங்கள் நாள் முழுவதும் அவருடன் இணைப்பில் இருப்பதை நீங்கள் எவ்வாறு நினைவில் கொள்ள முடியும்?
கிருபையான தேவனே, எனது நாள் முழுவதும் உம்முடன் இனைந்து இருக்குமாறு தயவுசெய்து எனக்கு நினைவூட்டும். நான் எதிர்கொள்ளும் அனைத்திலும் களிகூர்ந்து உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.