“தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருந்தார்! எங்கள் திருமண  ஆண்டுவிழாவிற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்”  ராதாவின் குரல் சீராக இருந்தது, அவள் கண்களில் கண்ணீர் அவளது உண்மையைக் காட்டியது. எங்களுடைய சிறிய குழுவிலிருந்தவர்கள் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த வருடங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு விசுவாசி என்றாலும், ராகுல் திடீரென கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டார் மேலும் அவர்களின் நான்கு வயது மகளின் உயிரைப் பறித்தார். அவர் பல ஆண்டுகள் மனநல காப்பகத்தில் இருக்க வேண்டியிருந்தது, ஆனால் ராதா அவரைச் சந்தித்தார், மேலும் தேவன் அற்புதமாகக் குணப்படுத்தினார், அவளை மன்னிக்க உதவினார். ஆழ்ந்த மனவேதனைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கிடையேயான அன்பு வளர்ந்தது.

அத்தகைய அன்பும் மன்னிப்பும் ஒரே ஒரு ஆதாரத்திலிருந்து மட்டுமே வர முடியும். தாவீது தேவனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார், “அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும்.. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.” (சங்கீதம் 103:10, 12).

தேவன் நமக்குக் காண்பிக்கும் இரக்கமானது அவருடைய அளவிடப்படமுடியா அன்பின் மூலம் வருகிறது: “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ.. அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (வ.11). அந்த மிகவும் ஆழமான அன்பு அவரை சிலுவை மற்றும் கல்லறையின் ஆழத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களைப் போக்கும்படி தூண்டியது, இதனால் “அவரை ஏற்றுக்கொண்டவர்கள்” (யோவான் 1:12) அனைவரையும் அவர் தம்மிடமாய் கொண்டு வர முடியும்.

“தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார்!” ராதா சொன்னது சரிதான். அவருடைய அன்பும் மன்னிப்பும் நினைத்துப்பார்க்க முடியாத எல்லைகளுக்கு அப்பால் சென்று நித்திய வாழ்வை நமக்களிக்கிறது.