Archives: ஆகஸ்ட் 2024

அதிகம் இயேசுவைப் போலத் தோன்றுதல்

தேவன் பெரிய சாம்பல் ஆந்தையை உருமறைப்பில் வல்லதாக வடிவமைத்துள்ளார். அதன் வெள்ளியும் சாம்பலுமான இறகுகள் ஒரு வண்ணமயமான வடிவ அமைப்பைக் கொண்டுள்ளன, இது அவை மரங்களில் அமரும் போது அவற்றின் பட்டையுடன் இரண்டற கலக்க உதவுகிறது. ஆந்தைகள் தன்னை மறைத்துக்கொள்ள விரும்பினால், அவை மேலான பார்வையிலிருந்து ஒளிந்துகொள்கின்றன, அவற்றின் இறகு உருமறைப்பு உதவியுடன் அவற்றின் சூழலோடு ஒன்றாகக் கலக்கின்றன.

தேவஜனங்களும் பெரும்பாலும் பெரிய சாம்பல் ஆந்தையைப் போன்றவர்களே. விருப்பத்தோடு அல்லது விருப்பமின்றியே எவ்வாறாயினும் நாமும் உலகத்தோடு எளிதில் கலந்து, கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கான அடையாளத்தை மறைக்க முடியும். பிதாவானவரால்  

 "உலகத்தில் தெரிந்தெடுத்து" அவருக்காகத் தரப்பட்டவர்களும், தம்முடைய "வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறவர்களுமான" தமது சீடர்களுக்காக (யோவான் 17:6) இயேசு ஜெபித்தார். குமாரனாகிய தேவன், பிதாவாகிய தேவனிடம் தாம் அவர்களை விட்டுப் பிரிந்த பிறகு, அவர்களைப் பரிசுத்தத்திலும் நிலைத்திருத்தலிலும் சந்தோஷமாக வாழ அவர்களைப் பாதுகாத்து அதிகாரமளிக்கும்படி வேண்டினார் (வ. 7-13). அவர் கூறினார், "நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்" (வ. 15). தம்முடைய சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிரித்தெடுக்கபட வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார், அதனால் அவர் அவர்களை நிறைவேற்றும்படி அனுப்பிய நோக்கத்தை அவர்களால் நிறைவேற்ற முடியும் (வ. 16-19).

உலகத்துடன் கலக்கும் உருமறைப்பில் சிறந்தவர்களாக மாறும்படியான தூண்டுதலிலிருந்து மீள,  பரிசுத்த ஆவியானவரால் நமக்கு உதவ முடியும். நாம் தினமும் அவருக்கு அடிபணியும்போது, ​​நாம் அதிகம் இயேசுவைப் போல மாற முடியும். நாம் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழும்போது, ​​அவர் தமது சகல மகிமையோடும் பிறரை கிறிஸ்துவிடம் இழுப்பார்.

வனாந்திர இடங்கள்

நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, ​​​​நான் இயேசுவை சந்திக்கும் இடமாக "மலையுச்சி" அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம்,  வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். "தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை ​​இன்றி அதனை நிரூபிக்க இயலாது" என மேலும் எழுதுகிறார்.

துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா  கற்றுக்கொண்டது போல், "தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்."

தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).

தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் "கால்தடம்"  போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், "நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்" (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, ​​"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்" (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர்  மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக.

புதிதாக வாழுதல்

ஒரு பள்ளியின் சிறந்த மாணவர்கள் கல்விச் சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது கைதட்டல்கள் முழங்கின. ஆனால் அதோடு நிகழ்ச்சி முடிவடையவில்லை. அடுத்த விருது பள்ளியின் "சிறந்த" மாணவர்கள் அல்ல, மாறாக மிகவும் மேம்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் தோல்வியடைந்த பாடத்தில் முன்னேற, சீரழிக்கும் நடத்தையை மாற்றிக்கொள்ள அல்லது வகுப்புக்கு தவறாமல் வருகை தரக் கடினமாக உழைத்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து கைதட்டி, தங்கள் பிள்ளைகள் உயர்ந்த பாதைக்குத்  திரும்பியதை ஏற்றுக்கொண்டனர். அவர்களின் முந்தைய குறைபாடுகளைப் பார்க்காமல் அவர்கள் புதிய பாதையில் நடப்பதைக் கண்டனர்.

நமது பழைய வாழ்க்கையை அல்ல, இப்போது கிறிஸ்துவில் அவருடைய பிள்ளைகளாக நம்மை நம்முடைய பரலோகத் தகப்பன் எப்படிப் பார்க்கிறார் என்பதைச் சிறிய கற்பனையாகச் சிந்திக்க வைக்கும் கட்சியாக இது அமைந்திருந்தது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் எழுதினார்.

என்ன ஒரு அன்பான நோக்கம்! எனவே பவுல், "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்(தீர்கள்)த" (எபேசியர் 2:1) என்று  புதிய விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். ஆனால் உண்மையில், "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" (வ.10).

இதேபோல பேதுருவும், நம்மைக்குறித்து "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" என்றும் முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்(1 பேதுரு 2:9-10) என்றும் எழுதினார். தேவனின் பார்வையில், நம்மீது நமது பழைய வாழ்க்கைக்கு அதிகாரமில்லை. தேவன் பார்ப்பது போல் நாமும் நம்மைப் பார்ப்போம், புதிதாக நடப்போம்.

மனந்திரும்பும் இருதயம்

ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, ​என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது  மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் "அருவருப்பான விக்கிரகங்களை" அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் "உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்" அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.

தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை "நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்" (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, ​​அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.