Archives: ஜூலை 2024

பரலோகத் தகப்பனை அழைத்தல்

இரண்டாம் உலகப் போரின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மிசோரியின் கிராண்ட்வியூவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ஒரு தொலைபேசி ஒலித்தது. தன்னுடைய விருந்தினர்களிடம் ஒப்புதல் கேட்டு, ஒரு தொண்ணூற்று இரண்டு வயதான பெண்மணி அழைப்பை எடுத்தார். அவர் பேசுவதை விருந்தினர் கேட்க நேரிட்டது, “ஹலோ... ஆம், நான் நன்றாக இருக்கிறேன். ஆம், நான் ரேடியயோவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... இப்போது உன்னால் முடிந்தால் என்னை வந்து பாருங்கள்... மீண்டும் சந்திக்கலாம்." வயதான பெண் தனது விருந்தினரிடம் திரும்பி, “அது என் மகன் ஹாரி. ஹாரி ஒரு அற்புதமான மனிதன்... அவன் அழைப்பார் என்று எனக்குத் தெரியும். ஏதாவது நடந்த பிறகு அவன் எப்போதும் என்னை அழைப்பான்” என்று சொன்னார்களாம். 

எவ்வளவு சாதித்தாலும், எவ்வளவு வயதானாலும், நம் பெற்றோரை அழைக்க ஏங்குகிறோம். “நன்றாகச் செய்தாய்” என்னும் அவர்களின் உறுதியான பாராட்டைப் பெறுவதற்காய். நாங்கள் பெரிதளவில் சாதித்தவர்களாய் இருக்கலாம்; ஆனால் நாம் எப்போதும் நம் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பதை மறப்பதில்லை. 

துரதிர்ஷ்டவசமாக, அனைவருக்கும் தங்கள் பூமிக்குரிய பெற்றோருடன் இந்த வகையான நல்ல உறவு இருப்பதில்லை. ஆனால் இயேசுவின் மூலம் நாம் அனைவரும் தேவனை நம் தகப்பனாக பெற்று;ககொள்ள முடியும். கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் தேவனுடைய குடும்பத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம். ஏனென்றால் நீங்கள் “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). நாம் இப்போது “தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (வச. 17). நாம் தேவனிடத்தில் அடிமையாகப் பேசவில்லை, மாறாக, இயேசு தன்னுடைய இக்கட்டான தருணத்தில் தேவனை அழைத்த “அப்பா பிதாவே” (மாற்கு 14:36) என்னும் அந்தரங்கப் பெயரைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.

உங்களிடம் செய்தி இருக்கிறதா? உங்களுக்கு தேவைகள் உள்ளதா? உங்கள் நித்திய வீடாய் இருப்பவரை அழையுங்கள்.

வாழ்க்கை மாற்றும் தெய்வீக பரிசு

நானும் எனது கணவரும் எங்களது இளைஞர் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு வேதாகமங்களை பரிசளித்தோம். “உங்கள் வாழ்க்கையை மாற்ற கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளைப் பயன்படுத்துவார்” என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அன்றிரவு, ஒரு சில மாணவர்கள் யோவானின் சுவிசேஷத்தை ஒன்றாக வாசிக்க தீர்மானித்தனர். எங்கள் வாராந்திர கூட்டங்களில் நாங்கள் அவர்களுக்குக் கற்பித்தபோது, வீட்டில் வேதத்தை வாசிக்க குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தினோம். பத்து ஆண்டுகள் கழித்து, எங்கள் மாணவர் ஒருவரை நான் சந்திக்க நேரிட்டது. அவள் என்னிடத்தில் “நீங்கள் கொடுத்த பைபிளை நான் இன்னும் பயன்படுத்துகிறேன்,” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கை நிரம்பிய வாழ்க்கையில் நான் ஆதாரங்களைக் கண்டேன்.

வேதத்தின் வசனங்களைப் படிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவன் தம் ஜனத்திற்கு அதிகாரம் கொடுக்கிறார். வேதவாக்கியங்களின்படி (சங்கீதம் 119:9) வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை மாற்றவும் அவர் தம் மாறாத சத்தியங்களைப் பயன்படுத்தும்போது, நாம் அவரைத் தேடிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வச. 10-11). தேவனை அறிந்துகொள்ளவும், வேதாகமத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்படி தினமும் தேவனிடத்தில் விண்ணப்பிக்க பிரயாசப்படுவோம் (வச. 12-13).

தேவனுடைய வழியில் வாழ்வதன் விலைமதிப்பற்ற மதிப்பை நாம் அடையாளம் காணும்போது, ஒருவன் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல” (வச. 14-15) அவருடைய ஆலோசனையில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (வச. 16) என்று பாடலாம். நம்மை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, தேவன் நம்முயை வாழ்க்கை மாற்றும் பரிசாக நமக்குக் கொடுத்திருக்கிற வேதத்தை ஜெபத்துடன் வாசிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.

 

ஒரு தேசிய முகாம்

மேற்கு ஆப்பிரிக்க வானத்துக்கும் எங்களுக்கும் இடையில் எதுவும் இல்லாதபடிக்கு, நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் முகாமிட்டோம். வறண்ட காலங்களில் கூடாரம் தேவையில்லை. ஆனால் நெருப்பு முக்கியமானது. “நெருப்பை அணைய விடாதே” என்று அப்பா ஒரு குச்சியால் மரக்கட்டைகளைத் தூண்டினார். நெருப்பு வனவிலங்குகளை எங்களுக்கு அருகாமையில் வரவிடாமல் தூரத்தில் வைத்திருந்தது. தேவனுடைய படைப்புகள் அற்புதமானவைகள் தான். ஆனால் உங்கள் முகாமில் சிறுத்தை அல்லது பாம்பு வந்துபோவதை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீhர்கள்.

அப்பா கானாவின் மேல் பிராந்தியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திறன் இருந்தது. அந்த முகாமும் விதிவிலக்கல்ல.

தேவன் தம் ஜனங்களுக்கும், முகாம்களை போதிக்கிற ஒரு ஸ்தலமாகவே அனுமதித்திருந்தார். வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் முழுவதும், இஸ்ரவேலர்கள் “பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும்” (லேவியராகமம் 23:40) வைத்து தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தது. தேவன் அவர்களிடம், “நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்” (வச. 42-43) என்று சொல்லுகிறார். ஆனாலும், அந்த நாட்கள் பண்டிகையாய் ஆசரிக்கப்படவேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (வச. 40). 

முகாமிடுவது என்பது உங்கள் வேடிக்கையான யோசனையாக இருக்காது. ஆனால் தேவன் தனது நன்மையை நினைவுகூர ஒரு மகிழ்ச்சியான வழியாக இஸ்ரவேலருக்கு ஒரு வார முகாமை ஏற்படுத்தினார். விடுமுறை நாட்களின் அர்த்தத்தை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். நம் பண்டிகைகள் நம் அன்பான தேவனின் தன்மையை நமக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான நினைவூட்டல்களாக இருக்கலாம். அவர் அதில் நமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார். 

 

மகிழ்ச்சியில் ஊழியம் செய்தல்

ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும். 

அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார். 

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.