வர்ஜீனியாவிலுள்ள எங்கள் முன்னாள் திருச்சபையில், ரிவானா ஆற்றில் வைத்து ஞானஸ்நானம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அங்கு பெரும்பாலும் சூரிய ஒளியின் வெப்பம் அதிகமாக இருக்கும்; ஆனால் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். எங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்த பிறகு, நாங்கள் எங்கள் கார்களிலும் கேரவனிலும் அவ்விடத்திற்கு செல்வோம். அங்கு அண்டை வீட்டார் மற்றும் அவர்களின் பிள்ளைகள் விளையாட்டு மைதானத்தில் குவிந்து விளையாடிக்கொண்டிருப்பர். நாங்கள் அவர்களை அமைதியாகக் கடந்து ஆற்றிற்கு செல்வோம். குளிர்ந்த நீரில் நின்று, நான் வேதவாக்கியங்களை வாசித்து, ஞானஸ்நானம் பெறுபவர்களை தேவனுடைய அன்பின் இந்த உறுதியான வெளிப்பாட்டில் மூழ்கச் செய்வேன். அவர்கள் ஆற்றிலிருந்து வெளிப்பட்டதும், ஆரவாரமும் கைதட்டல்களும் வெடித்தன. கரையில் ஏறி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களை அணைத்துக் கொண்டனர். நாங்கள் கேக், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிட்டோம். என்ன நடக்கிறது என்பதை அக்கம்பக்கத்தினர் எப்போதும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அது ஒரு கொண்டாட்டம் என்று அவர்களுக்குத் தெரியும்.
லூக்கா 15இல், கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் கதை (வச. 11-32), எப்போதெல்லாம் ஒருவர் மனந்திரும்பி தகப்பனுடைய வீட்டிற்கு வருகிறார்களோ, அது ஒரு கொண்டாட்டத்திற்கான தருணம் என்பதை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய அழைப்பிற்கு யாராவது ஆம் என்று சொன்னால், அது விருந்திற்கான நேரம். தகப்பனை மறுதலித்த மகன் திரும்பி வந்தபோது, ததப்பன் உடனடியாக அவனுக்கு எதிர்கொண்டுபோய், அழகான வஸ்திரம், பளபளப்பான மோதிரம் மற்றும் புதிய பாதரட்சைகளை அவனுக்குக் கொடுக்கிறார். ‘கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்” (லூக்கா 15:23) என்கிறார். தேவனுடைய குடும்பத்தில் யாரெல்லாம் புதிதாய் இணைகிறார்களோ, அது நிச்சயமாகவே கொண்டாட்டத்தின் தருணமாய் இருக்கும் (வச. 24).
மாற்றமும் குணமடைதலும் நடந்ததை நீங்கள் எங்கே பார்த்தீர்கள்? இந்த தருணங்களில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?
அன்பான தேவனே, நான் கொண்டாடுவதற்கு நிறைய இருக்கிறது. இந்த மகிழ்ச்சி உம்மிடமிருந்து எனக்கு கிடைக்கிறது. நீர் என் வாழ்க்கையில் கிரியை நடப்பிக்கிறீர்.