“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டம் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.
பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.
சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
மற்றவர்களின் ஜெபங்களால் நீங்கள் எவ்வாறு பயனடைந்தீர்கள்? இன்று யாருக்காக ஜெபம் செய்கிறீர்கள்?
தகப்பனே, நீர் என் சத்தத்தை கேட்பதற்காய் நன்றி! ஒவ்வொரு நாளும் உம்முடன் பேசுவதற்கும் மற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கும் கிடைத்த வாய்ப்பைப் பொக்கிஷமாகக் கருத எனக்கு உதவிசெய்யும்.