நானும் எனது கணவரும் எங்களது இளைஞர் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு வேதாகமங்களை பரிசளித்தோம். “உங்கள் வாழ்க்கையை மாற்ற கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளைப் பயன்படுத்துவார்” என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அன்றிரவு, ஒரு சில மாணவர்கள் யோவானின் சுவிசேஷத்தை ஒன்றாக வாசிக்க தீர்மானித்தனர். எங்கள் வாராந்திர கூட்டங்களில் நாங்கள் அவர்களுக்குக் கற்பித்தபோது, வீட்டில் வேதத்தை வாசிக்க குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தினோம். பத்து ஆண்டுகள் கழித்து, எங்கள் மாணவர் ஒருவரை நான் சந்திக்க நேரிட்டது. அவள் என்னிடத்தில் “நீங்கள் கொடுத்த பைபிளை நான் இன்னும் பயன்படுத்துகிறேன்,” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கை நிரம்பிய வாழ்க்கையில் நான் ஆதாரங்களைக் கண்டேன்.
வேதத்தின் வசனங்களைப் படிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவன் தம் ஜனத்திற்கு அதிகாரம் கொடுக்கிறார். வேதவாக்கியங்களின்படி (சங்கீதம் 119:9) வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை மாற்றவும் அவர் தம் மாறாத சத்தியங்களைப் பயன்படுத்தும்போது, நாம் அவரைத் தேடிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வச. 10-11). தேவனை அறிந்துகொள்ளவும், வேதாகமத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்படி தினமும் தேவனிடத்தில் விண்ணப்பிக்க பிரயாசப்படுவோம் (வச. 12-13).
தேவனுடைய வழியில் வாழ்வதன் விலைமதிப்பற்ற மதிப்பை நாம் அடையாளம் காணும்போது, ஒருவன் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல” (வச. 14-15) அவருடைய ஆலோசனையில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (வச. 16) என்று பாடலாம். நம்மை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, தேவன் நம்முயை வாழ்க்கை மாற்றும் பரிசாக நமக்குக் கொடுத்திருக்கிற வேதத்தை ஜெபத்துடன் வாசிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.
வேதத்தைப் படிப்பதில் நீங்கள் எவ்வாறு முதலீடு செய்கிறீர்கள்? அதில் மகிழ்ச்சியடைவது, தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான அழைப்பைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை எவ்வாறு மாற்றக்கூடும்?
அன்பான தேவனே, என் வாழ்வில் உமது ஞானத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணிய எனக்கு அதிகாரம் அளித்து, வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகளைக் கண்டு மகிழ்ச்சியடைய எனக்கு உதவிசெய்யும்.