மேற்கு ஆப்பிரிக்க வானத்துக்கும் எங்களுக்கும் இடையில் எதுவும் இல்லாதபடிக்கு, நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் முகாமிட்டோம். வறண்ட காலங்களில் கூடாரம் தேவையில்லை. ஆனால் நெருப்பு முக்கியமானது. “நெருப்பை அணைய விடாதே” என்று அப்பா ஒரு குச்சியால் மரக்கட்டைகளைத் தூண்டினார். நெருப்பு வனவிலங்குகளை எங்களுக்கு அருகாமையில் வரவிடாமல் தூரத்தில் வைத்திருந்தது. தேவனுடைய படைப்புகள் அற்புதமானவைகள் தான். ஆனால் உங்கள் முகாமில் சிறுத்தை அல்லது பாம்பு வந்துபோவதை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீhர்கள்.
அப்பா கானாவின் மேல் பிராந்தியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திறன் இருந்தது. அந்த முகாமும் விதிவிலக்கல்ல.
தேவன் தம் ஜனங்களுக்கும், முகாம்களை போதிக்கிற ஒரு ஸ்தலமாகவே அனுமதித்திருந்தார். வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் முழுவதும், இஸ்ரவேலர்கள் “பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும்” (லேவியராகமம் 23:40) வைத்து தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தது. தேவன் அவர்களிடம், “நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்” (வச. 42-43) என்று சொல்லுகிறார். ஆனாலும், அந்த நாட்கள் பண்டிகையாய் ஆசரிக்கப்படவேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (வச. 40).
முகாமிடுவது என்பது உங்கள் வேடிக்கையான யோசனையாக இருக்காது. ஆனால் தேவன் தனது நன்மையை நினைவுகூர ஒரு மகிழ்ச்சியான வழியாக இஸ்ரவேலருக்கு ஒரு வார முகாமை ஏற்படுத்தினார். விடுமுறை நாட்களின் அர்த்தத்தை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். நம் பண்டிகைகள் நம் அன்பான தேவனின் தன்மையை நமக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான நினைவூட்டல்களாக இருக்கலாம். அவர் அதில் நமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.
உங்களுக்கு பிடித்த விடுமுறை எது, ஏன்? அதைக் கொண்டாடுவது தேவனுடைய குணாதசியங்களை உங்களுக்கு எப்படி நினைவூட்டுகிறது?
தகப்பனே, உமது படைப்பிலும், உமது பண்டிகைகளிலும் நீர் ஏற்படுத்திக் கொடுத்த மகிழ்ச்சிக்காய் உமக்கு நன்றி.