2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். “நான் கட்டிடத்தை வாங்கியபோது, ​​​​எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை” என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்” (ஏசாயா 41:17) இருப்பதால் “வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)” (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, ​​”கர்த்தருடைய கரம் அதைச்செய்தது” (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு” (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், ​​நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.