ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப் பலர் கருதுகின்றனர்.
எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.
இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).
நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.
வாழ்க்கையின் பாதையில் தேவனின் ஈவுகளைப் பெறும்படி, இன்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்ப்போடு இருக்க முடியும்? இப்போது இருப்பது போல் இந்த உலகம் உங்களின் மெய்யான வீடல்ல என்பதை உங்களுக்கு நீங்களே எவ்வாறு நினைவூட்டிக்கொள்ள முடியும்?
அன்பு தேவனே, வாழ்க்கையின் சோதனைகள் உம்மீதான ஆழமான விசுவாசத்தை வளர்க்கும்படியான வாய்ப்புகள் என்பதை எனக்குக் காட்டியதற்காக உமக்கு நன்றி.
