சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் தலைமையின் கொந்தளிப்பான மாற்றத்திற்குப் பிறகு, தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்ள எங்கள் சபையும் அழைக்கப்பட்டது. அநேக குடும்பங்கள், ஒரு சிறிய பையில் தங்களால் இயன்றதை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். எங்கள் சபை குடும்பங்களில் பலர் தங்கள் வீடுகளில் அவர்களை ஏற்றுக்கொண்டனர். சில வீடுகளில் இடவசதி மிகக்குறைவாகவே இருந்தது.

அவர்களுடைய விருந்தோம்பல், இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பிரவேசித்தபோது அவர்களுக்குத் தேவன் தந்த மூன்று கட்டளைகளைப் பிரதிபலிக்கிறது (உபாகமம் 24:19-21). விவசாயம் செய்யும் சமூகமாக, அறுவடையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். அடுத்த ஆண்டு வரை தாக்குப்பிடிக்க அவர்களுக்குப் பயிர்கள் அவசியம். இதுவே தேவன், “அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக” (வ.19) என்று கட்டளையிடவும், அவரை நம்பும்படி அழைக்கவும் செய்தது. தங்களுக்கு போதுமானது உள்ளது என்று அறிந்து மட்டும் கொடுக்காமல், தேவனின் பராமரிப்பை நம்பும் உள்ளத்திலிருந்து கொடுத்து, இஸ்ரவேலர்கள் தாராள மனப்பான்மையை கடைப்பிடித்தனர்.

இத்தகைய விருந்தோம்பல், அவர்களும் “எகிப்திலே அடிமையாயிருந்ததை” (வ.18, 22) நினைவூட்டுவதாகவும் இருந்தது. அவர்கள் ஒரு காலத்தில் நசுக்கப்பட்டு, ஆதரவற்றிருந்தனர். அவர்களின் உதாரத்துவம் அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனின் கிருபையை நினைவூட்டுவதாக இருந்தது.

இயேசுவின் விசுவாசிகளும் உதாரத்துவமாய் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரிந்தியர் 8:9) என்று பவுல் நமக்கு நினைப்பூட்டினார். அவர் நமக்களித்ததால் நாமும் அளிக்கிறோம்.