என் தோழன் செல்வா, தனது குளிர்சாதனப்பெட்டியைப் பழுதுபார்ப்பவரின்  வருகைக்காகக் காத்திருக்கையில், அந்த நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெற்றார். அதில், “இயேசு வந்துகொண்டிருக்கிறார், சுமார் 11:35 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றிருந்தது. பழுதுபார்ப்பவரின் பெயர் உண்மையில் ஜீசஸ் (இயேசு) என்பதைச் செல்வா விரைவில் கண்டுகொண்டார்.

ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கலாம்? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனாக வந்து நம்முடைய பாவத்தின் தண்டனையை அனுபவித்தபோது, ​​அவர் திரும்பி வருவார் என்று கூறினார். ஆனால் அவர் திரும்பி வருவதற்கான  “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” பிதா மட்டுமே அறிவார் (மத்தேயு 24:36). நமது இரட்சகர் மீண்டும் பூமிக்கு வரும் தருணத்தை நாம் அறிந்திருந்தால், நமது அனுதின முன்னுரிமைகளில் எத்தகைய வித்தியாசம் ஏற்படும்? (யோவான் 14:1-3).

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44) என்று தனது வருகைக்காக ஆயத்தப்படும்படி இயேசு எச்சரித்தார். “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (வ. 42) என்று நமக்கு நினைப்பூட்டினார்.

கிறிஸ்து திரும்பும் நாளில், நம்மை எச்சரிப்பதற்கு நமது அலைபேசியில் தகவலைப் பெற மாட்டோம். எனவே, நம் மூலம் செயல்படும் ஆவியானவரின் வல்லமையின் மூலம், ஒவ்வொரு நாளும் நித்தியத்தின் கண்ணோட்டத்துடன் வாழ்ந்து, தேவனுக்கு ஊழியம் செய்வோம். அவருடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம்.