கீதாவின் இளைய மகனுக்குத் தசைநார் சிதைவு தொடர்பான மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, தன் குடும்பச் சூழலால் ஏற்பட்ட மனச்சுமையைக் குறைக்க, வேறொருவருக்காக ஏதாகிலும் உதவி செய்ய விரும்பினாள். அதனால் அவள் தன் மகனின் சிறிதாய்ப்போன , நல்ல காலணிகளை எடுத்து, ஒரு ஊழிய ஸ்தாபனத்திற்கு நன்கொடையாக அளித்தாள். இந்த காரியம், அவளது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரையும் இணைந்துகொள்ளும்படி தூண்டியது, விரைவில் இருநூறு ஜோடிக்கும் மேற்பட்ட காலணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது!
காலணிகளை கொடையளித்தது மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக இருந்தாலும், தனது குடும்பம் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டதாக கீதா உணர்ந்து, “இந்த முழு அனுபவமும் மெய்யாகவே எங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டியது ,பிறரிடம் எங்கள் கவனத்தைச் செலுத்த உதவியது” என்றாள்.
தாராளமாகக் கொடுப்பது இயேசுவின் சீடர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பவுல் புரிந்துகொண்டார். எருசலேமுக்குச் செல்லும் வழியில், அப்போஸ்தலன் பவுல் எபேசுவில் தங்கினார். அவர் அங்கு ஸ்தாபித்த சபையின் மக்களுடனான அவரது கடைசி சந்திப்பாக இது இருக்கலாம் என்று அவர் அறிந்திருந்தார். சபை மூப்பர்களுக்கான தனது பிரியாவிடை உரையில், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தான் எவ்வாறு ஜாக்கிரதையுடன் பணியாற்றினார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (அப் 20:17-20) மேலும் அவர்களும் அதையே செய்யும்படி உற்சாகமூட்டினார் (வ.35) பின்னர், “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (வ.35) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு முடித்தார்.
நாம் விருப்பத்தோடும், தாழ்மையோடும் நம்மையே கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் (லூக்கா 6:38). அவர் நம்மை வழிநடத்துவார் என்று நாம் நம்பும்போது, அதற்கான வாய்ப்புகளை அவர் நமக்கு வழங்குவார். கீதாவின் குடும்பத்தைப் போலவே நாமும் அதன் விளைவாக அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படலாம்.
உங்களையே அர்ப்பணம் செய்திட தேவன் எவ்விதத்தில் உங்களை அழைக்கிறார்? ஒருவரின் பெருந்தன்மையால் நீங்கள் எப்போது பயனடைந்தீர்கள்?
அன்பு தகப்பனே, மற்றவர்களுக்கு எனது நேரத்தையும், என்னிடம் உள்ளதையும் தாராளமாகக் கொடுக்க எனக்கு உதவும்.