என் தோழி, மன அழுத்தம் நிறைந்த மருத்துவமனை வேலையிலிருந்து விரைந்தாள்.அவளுடைய கணவரும் அதேபோன்ற வேலையிலிருந்து தான்  வீடு திரும்புவான். அப்போது  இரவு உணவிற்கு என்ன சமைப்பதென்று யோசித்தாள். அவள் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி சமைத்து, திங்கட்கிழமை மிச்சத்தைப் பரிமாறினாள். செவ்வாய்க்கிழமையன்று அவள் கண்டதெல்லாம் குளிர்சாதனப்பெட்டியிலிருந்த காய்கறிகள்தான், ஆனால் சைவ உணவு தன் கணவனுக்குப் பிடிக்காதென்றறிவாள். குறுகிய நேரத்தில் வேறு எதையும் சமைக்க இயலாததால், காய்கறிகளைச் சமைக்க முடிவு செய்தாள்.

அவள் உணவை மேசையில் வைத்தபோது, ​​வீட்டிற்கு வந்திருந்த தன் கணவனிடம் சற்றே மன்னிப்புக் கேட்கும் தொனியில், “இது உங்களுக்குப் பிடிக்காதென்று அறிவேன்” என்றாள். அவள் கணவன் நிமிர்ந்து பார்த்து, “அன்பே, மேஜையில் நமக்கு உணவு இருப்பதற்கே நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அவருடைய மனப்பான்மை, தேவனிடம் நாம் பெரும் அனுதின பராமரிப்பிற்காக  நன்றியுடனும் உவகையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை எனக்கு நினைவூட்டுகிறது; அவை எதுவாக இருந்தாலும் சரி. நமது அனுதின உணவோ, சிற்றுண்டியோ அதற்காக நன்றி செலுத்துவதே இயேசுவின் முன்மாதிரி. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தனது இரண்டு சீடர்களுடன், “அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்” (லூக்கா 24:30). அவர் முன்பு ஐயாயிரம் பேருக்கு “ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு சிறிய மீன்களை” (யோவான் 6:9) கொண்டு போஷித்தபோது, பிதாவிற்கு  நன்றி செலுத்தியதுபோலவே செய்தார். நமது அனுதின உணவுக்காகவும் மற்ற பராமரிப்பிற்காகவும் நன்றி செலுத்துகையில், ​​நம்முடைய நன்றியறிதல் இயேசுவின் வழிமுறைகளைப் பிரதிபலிக்கும், பரலோகத் தகப்பனைக் கனப்படுத்தும். இன்று தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.