என் திருச்சபை தலைவர் ஹரோல்ட் மற்றும் அவரது மனைவி பாம் ஆகியோரின் இரவு உணவிற்கான அழைப்பு என் மனதிற்கு இதமாயிருந்தது. ஆனால் அந்த அழைப்பு என்னை பதட்டப்படுத்தியது. ஏனென்றால், வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கற்பிக்கும் கல்லூரி வேதாகமப் படிப்புக் குழுவில் நான் சேர்ந்தேன். அவர்கள் அதைப் பற்றி ஒருவேளை என்னிடம் பேசுவார்களோ? என்று அஞ்சினேன். 

பீட்சா உட்கொண்டவாறே, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் மற்றும் என்னுடைய குடும்பத்தையம் விசாரித்து அறிந்தனர். நான் என்னுடைய வீட்டுப்பாடம் எழுதுவது குறித்தும், என் நாய் மற்றும் நான் நேசிக்கும் நபரைக் குறித்தும் அவர்கள் இயல்பாய் பேசினர். அதன் பிறகுதான் நான் கலந்துகொண்ட குழுவைப் பற்றி மெதுவாக எச்சரித்து, அதன் போதனைகளில் என்ன தவறு என்று விளக்கினார்கள்.

அவர்களின் எச்சரிக்கை வேதாகம படிப்பில் வழங்கப்பட்ட பொய்களிலிருந்து என்னை விலக்கி, வேதத்தின் உண்மைகளுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. யூதா தனது நிருபத்தில், தவறான போதகர்களைப் பற்றி வலுவான மொழியைப் பயன்படுத்துகிறார். “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) அவர்களை எச்சரிக்கிறார். கடைசிகாலத்திலே பரியாசக்காரர் இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் ஆவியில்லாத ஜென்மசுபாவக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறார் (வச. 18-19). இருப்பினும் யூதா, விசுவாசிகளை “சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள்” (வச. 22) என்று அவர்களோடு சத்தியத்தை சமரசம் செய்யாமல் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கும்படி சொல்லுகிறார். 

ஹரோல்டும் அவரது மனைவி பாமும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இல்லை என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் என்னை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் தங்கள் நட்பை வழங்கினர். பின்னர் தங்கள் ஞானத்தை வழங்கினர். குழப்பத்தில் உள்ளவர்களுடன் பழகும்போது, ஞானத்தையும் இரக்கத்தையும் பயன்படுத்த, இதே அன்பையும் பொறுமையையும் தேவன் நமக்குத் தந்தருளுவாராக.