ராக்கி திரைப்படங்கள் ஓர் குத்துச்சண்டை வீரரின் கதையைச் சொல்கிறது. அவர் ஹெவிவெயிட் சாம்பியனாவதற்கு சாத்தியமில்லாத முரண்பாடுகளை முறியடித்து, எப்படி வாழ்க்கையில் ஜெயித்தார் என்பதை சொல்கிறது. ராக்கி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில், வெற்றியடைந்த ராக்கி தனது சொந்த சாதனைகளால் ஈர்க்கப்படுகிறார். தொலைக்காட்சி விளம்பரங்கள் அவரின் உடற்பயிற்சி நேரத்தை வீணாக்கின. அதின் விளைவாய் அவருடைய எதிர்தரப்பினர் மூலம் குத்துச்சண்டையில் தோல்வியை தழுவுகிறார். மீண்டும் சுதாரித்து, தன்னுடைய பழைய நிலைக்கு எவ்வாறு வருகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லவேண்டுமாகில், யூதாவின் ராஜா ஆசா தனது சண்டை முனையை இழந்துவிட்டான். அவனது ஆட்சியின் ஆரம்பத்தில், அவன் கடினமான முரண்பாடுகளை எதிர்கொண்டு தேவனை நம்பினான். வலிமைமிக்க கூஷியர்கள் தாக்கத் தயாரானபோது, “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்” (2 நாளாகமம் 14:11) என்று ஆசா ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார். யூதேயா தேசம் அவர்களுடைய எதிரிகளை மேற்கொண்டது (வச. 12-15).

பல ஆண்டுகளுக்குப் பிறகு, யூதேயா மீண்டும் அச்சுறுத்தப்பட்டது. இம்முறை ஆசா தேவனை புறக்கணித்து, அந்நிய தேசத்து ராஜாவிடம் உதவிகேட்கிறான் (16:2-3). அது அவனுக்கு நன்றாகத் தோன்றியது. ஆனால் தேவன் மகிழ்ச்சியடையவில்லை. அவன் தேவனை நம்புவதை நிறுத்திவிட்டதாக அனானி தீர்க்கதரிசி ஆசாவிடம் கூறினான் (வச. 7-8). அவன் ஏன் முன்போல் இப்போது தேவனை நம்பவில்லை?

நம் தேவன் முற்றிலும் நம்பகமானவர். அவருடைய கண்கள் “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி” பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது (வச. 9). நாம் முற்றிலும் தேவனை சார்ந்துகொண்டு, நம்முடைய ஆவிக்குரிய முனையை சரியாய் வைத்திருக்கும்போது, அவருடைய பெலனை உணரலாம்.