“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன்.
எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார்.
தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).
பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
எந்தப் பணியைச் செய்ய தேவன் உங்களை அழைக்கிறார்? அவருடைய வழிகாட்டுதலுக்காக நீங்கள் எந்தெந்த காரியங்களில் ஜெபிக்கலாம்?
தகப்பனே, எனக்குத் தேவையான அனைத்தையும் எனக்கு அளித்ததற்காய் உமக்கு நன்றி.