2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் – இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.