“நான் எஜமானனா அல்லது ஊழியனா?”, பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்று ஆராயும்போது இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். திரளான செல்வத்தால் வரக்கூடிய சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்த அவர், அந்த சவாலை தனது வாரிசுகளும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் தனது நிறுவனத்தின் உரிமையை கைவிட்டு, தனது அதிகார பங்குகளில் 100 சதவீதத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு கையளித்தார். தனக்குச் சொந்தமான அனைத்தும் தேவனுக்கே சொந்தமானது என்பதை அவர் புரிந்துகொண்டது, தனது குடும்பம் வேலை செய்து சம்பாதிக்கும்படி தீர்மானிக்க அவருக்கு உதவியது. அதே நேரத்தில் வருங்கால லாபத்தை தேவனின் ஊழியத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தவும் உதவியது.

சங்கீதம் 50:10 இல் தேவன் தனது ஜனங்களிடம், “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்” என்கிறார். சர்வத்தையும் சிருஷ்டித்தவரான அவருக்கு நம்மிடம் ஒன்றும் தேவையுமில்லை, அவர் யாரிடமும் கடன்பட்டவருமல்ல. “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை” (வ.9) என்கிறார். நமக்குள்ளவற்றையும், நாம் பயன்படுத்தும் அனைத்தையும் அவர் தாராளமாக வழங்குகிறார். மேலும் வேலை செய்ய பெலனையும் திறனையும் அளிக்கிறார். இப்படியிருக்க, சங்கீதம் சொல்வதுபோல அவரே நமது மனமார்ந்த ஆராதனைக்கு பாத்திரர்.

தேவனே அனைத்துக்கும் சொந்தக்காரர். ஆனால் அவருடைய நற்குணத்தின் காரணமாக, அவர் தன்னைத் தானே கொடுக்கத் தெரிந்துகொண்டார். தம்மிடம் வரும் எவருடனும் உறவை ஏற்படுத்துகிறார். இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்” (மாற்கு 10:45). ஈவுகளை காட்டிலும் ஈந்தவரை நாம் மதித்து ஈவுகளைக் கொண்டு அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவருக்குள் என்றென்றும் களிகூரும் பாக்கியமடைவோம்.