அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு ‘லேவியராகமம்’. நான் என் குழுவினரிடம், “லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை” என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன்.  என் நண்பர் டேவ், “அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்” என்றார். மேலும், “அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது” என்றார்.

அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது  (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.

வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது,  நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக” (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.