தாழ்மை தரும் உயா்வு
பல ஆசிரியர்களைப் போலவே கேரியும் தனது ஆசிரியர் பணிக்காக, விடைத்தாள்களைத் தரவரிசைப்படுத்துவதில், மற்றும் மாலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேசுவதிலும் பல மணி நேரங்களை செலவழிக்கிறார். இந்த முயற்சியின் பலனைத் தக்கவைக்க, தன்னுடன் பணியாற்றும் பிற ஆசிரிய நண்பர்களின் தோழமை மற்றும் நடைமுறை உதவியைச் சார்ந்துகொள்கிறார். இந்த ஒத்துழைப்பினால் சவால் மிக்க அவருடைய பணி எளிதாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்களின் சமீபத்திய ஆய்வில், நாம் தாழ்மையுடன் பணிபுரியும் போது ஒத்துழைப்பின் பலன் பெரிதாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. சக பணியாளர்கள் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, மற்றவர்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் பாதுகாப்பாக உணர்கிறார்கள், இது குழுவில் உள்ள அனைவருக்கும் திறம்பட உதவுகிறது.
வேதாகமம் குழுவாக ஒத்துழைத்து பணியாற்றுவதைவிட, தாழ்மையின் அவசியத்தை அதிகம் போதிக்கிறது. "கர்த்தருக்குப் பயப்படுதல்" அதாவது தேவனுடைய சௌந்தரியம், வல்லமை மற்றும் மாட்சிமையோடு நம்மை ஒப்பிட்டு, சரியான புரிதலை நாம் கொண்டிருக்கும்போது, அது நமக்கு "ஐசுவரியத்தையும் கனத்தையும் ஜீவனையும்" (நீதிமொழிகள் 22:4) தருகிறது. தாழ்மை, நம்மை உலகத்தின் பார்வையில் மட்டுமல்ல, தேவனின் பார்வையிலும் பயனுள்ளவர்களாய் சமூகத்தில் வாழ வழி நடத்துகிறது. ஏனென்றால் நாம் சகா மனிதர் அனைவருக்கும் பயனளிக்கும் வாழ்வை வாழ விரும்புகிறோம்..
"ஐசுவரியத்தையும், கனத்தையும் ஜீவனையும்" நமக்கென்றே பெறுவதற்காக மட்டும் நாம் தேவனுக்குப் பயப்படுவதில்லை, அப்படியிருந்தால் அது உண்மையான தாழ்மையாக இருக்க முடியாது. மாறாக, "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலான" (பிலிப்பியர் 2:7) இயேசுவைப் பின்பற்றுகிறோம். எனவே, அவருடைய பணியைச் செய்வதற்கும், அவருக்கு கனத்தைக் கொடுப்பதற்கும், நம்மைச் சுற்றியுள்ளோர்க்கு வாழ்வளிக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதற்கும், தாழ்மையுடன் ஒத்துழைக்கும் ஒரு சரீரத்தின் அவயமாக நாம் மாறலாம்..
அன்பினால் ஊக்கப்படல்
கல்லூரி நாட்களில் ஜிம்மும் லனிடாவும் காதலர்கள். அவர்களின் திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் லனிடா வித்தியாசமாக நடந்துகொண்டாள், வழிப்பாதைகளையும் பணிநியமனங்களையும் மறந்தாள். அவளுடைய 47ம் வயதில், ஆரம்பக்கால அல்சைமர் நோயால் அவள் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவளது முதன்மை பராமரிப்பாளராகக் கடந்த 10 ஆண்டுகள் இருந்த ஜிம், " நான் அவளை நேசிக்கிறேன் என்று சொன்னதைக் காட்டிலும், அல்சைமர் என் மனைவியைக் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அன்பு கூறவும் அவளுக்குச் சேவை செய்யவும் எனக்கு வாய்ப்பளித்தது" என்றார்.
பரிசுத்த ஆவியானவரின் வரங்களை விளக்குகையில், பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 13ல் அன்பின் நற்பண்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடமைக்காகச் செய்யும் சேவைகளையும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பின் செயல்களையும் வேறுபடுத்துகிறார். பேச்சாற்றல் நல்லது, ஆனால் அன்பில்லாவிடில் சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" (வ.1) இருக்கும் என்று பவுல் எழுதினார். "என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." (வ. 3). "அன்பே பெரியது" (வ. 13) என இறுதியில் பவுல் கூறியுள்ளார்..
தன் மனைவியைக் கவனித்துக் கொண்டதினால் அன்பு மற்றும் சேவையைப் பற்றிய ஜிம்மின் புரிதல் ஆழமாயிற்று. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உதவும் பெலனை, ஆழமான மற்றும் நிலையான அன்பு மட்டுமே அவருக்கு வழங்க முடியும். இறுதியில், தேவன் நம் மீது செலுத்தும் அன்பிலே இந்த முன்மாதிரியான தியாக அன்பை முழுமையாகக் காணலாம்.இந்த அன்பே பிதாவானவர் இயேசுவை நம் பாவங்களுக்காக மரிக்க அனுப்பக் காரணமாயிற்று (யோவான் 3:16). அன்பால் உந்தப்பட்ட இந்த தியாகச் செயல் உலகை நிரந்தரமாக மாற்றிவிட்டது..
இயேசுவின் இரத்தம்
சிவப்பு நிறம் எப்போதும் நாம் செய்யும் பொருட்களில் இயற்கையாகவே இருக்காது. ஆப்பிளின் கவர்ச்சியான நிறத்தை உதட்டுச் சாயத்திலோ, சட்டையிலோ எப்படிக் கொண்டுவருவது? ஆரம்பத்தில், சிவப்பு வண்ணத்துகள்கள் களிமண் அல்லது சிவப்பு பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1400 களில், ஆஸ்டெக் மக்கள் சிவப்பு சாயத்தை தயாரிப்பதற்கு "காச்சினியல்" பூச்சிகளைப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தனர். இன்று, அதே சிறிய பூச்சிகள் சிவப்பு நிறத்தை உலகிற்கு வழங்குகின்றன.
வேதம் சிவப்பு நிறத்தை ராஜ மேன்மைக்கு ஒப்பிடுகிறது, மேலும் இது பாவத்தையும் அவமானத்தையும் குறிக்கிறது. மேலும் இது ரத்தத்தின் நிறம். போர் வீரர்கள் "இயேசுவின் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தினாா்கள் " (மத்தேயு 27:28). சிவப்பு நிறத்தின் இந்த மூன்று அடையாளங்களும் இனைந்து இதயத்தை உடைக்கும் ஒரே உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இயேசு யூதரின் ராஜா என்று பரியாசம் செய்யப்பட்டார். அவர் அவமானத்தால் மூடப்பட்டார், அவர் விரைவில் சிந்தப்போகும் இரத்தத்தின் நிறத்திலான மேலங்கியால் உடுத்தப்பட்டார். ஆனால் ஏசாயாவின் வார்த்தைகள், நம்மை கறைப்படுத்தும் சிவப்பிலிருந்து நம்மை விடுவிப்பதாக இந்த சிவந்த இயேசுவின் வாக்கை முன்னறிவிக்கிறது: "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்" (1:18).
சிவப்பு சாயத்திற்குப் பயன்படுத்தப்படும் காச்சினியல் பூச்சிகளைப் பற்றிய மற்றொரு விஷயம் - அவை உண்மையில் வெளிப்புறத்தில் பால் வெள்ளை நிறம் கொண்டவை. அவை நசுக்கப்படும்போது சிவப்பான ரத்தத்தைத் தருகின்றன. இந்த சிறிய உண்மை ஏசாயாவின் தீர்க்கரிசன வார்த்தைகளில் எதிரொலிக்கிறது: "[இயேசு] நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;" (ஏசாயா 53:5).
பாவம் அறியாத இயேசு, பாவத்தால் சிவந்த நம்மை இரட்சிக்க வந்திருக்கிறார். பாருங்கள், அவர் நசுங்கிய மரணத்தில், இயேசு அதிக சிவப்பு நிறங்கொண்டார், அதனால் நீங்கள் பனியைப் போல வெண்மையாக மாற முடியும்.
நம் சத்துருக்களைச் சிநேகிப்பது
அமெரிக்க உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளின் மத்தியில், ஆபிரகாம் லிங்கனுக்கு தெற்கு பகுதியினரைப் பற்றிக் கனிவாகப் பேசுவது சரியானதாகப் பட்டது. அருகே நின்றுகொண்டிருந்தவரோ அதிர்ச்சியுடன், அவரால் எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவர், "அம்மையாரே, நான் என் எதிரிகளை என் நண்பர்களாக்கும்போது எதிரிகள் அழிவதில்லையா?" எனக் கேட்டார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அந்த வார்த்தைகளைப் பற்றி, "இதுதான் மீட்டுக்கொள்ளும் அன்பின் வல்லமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்து சத்துருக்களை நேசிக்குமாறு சீடர்களை அழைத்திருக்க, லூதர் கிங் இயேசுவின் போதனைகளில் கற்றார். விசுவாசிகள் தங்களைத் துன்புறுத்துபவர்களை நேசிப்பது கடினமாயிருந்தாலும், தேவனுக்கு "தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் அர்ப்பணிப்பதால்" இத்தகைய அன்பு வளருகிறதைக் குறிப்பிடுகிறார். தொடர்ந்து "இப்படி நாம் அன்பு செலுத்துகையில் நாம் தேவனை அறிந்து அவருடைய பரிசுத்தத்தின் அழகை அனுபவிப்போம்" என்கிறார்.
"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்" (மத்தேயு 5:44-45) என்று இயேசு மலைப்பிரசங்கத்தை லூதர் கிங் மேற்கோள் காட்டினார். பிறனை மட்டுமே நேசிக்க வேண்டும், சத்துருக்களை வெறுக்க வேண்டும் என்ற அன்றைய வழக்கமான யோசனைக்கு எதிராக இயேசு ஆலோசனை கூறினார். மாறாக, பிதாவாகிய தேவன் தங்களை எதிர்ப்பவர்களை நேசிக்க தம்முடைய பிள்ளைகளுக்குப் பெலனைக் கொடுக்கிறார்.
நம் எதிரிகளை நேசிப்பது சாத்தியமற்றதாக தோன்றலாம், ஆனால் நாம் தேவனின் உதவியைத் தேடும்போது, அவர் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். "தேவனாலே எல்லாம் கூடும் " (19:26) என்று இயேசு சொன்னபடி, இந்த புரட்சிகரமான நடைமுறையைத் தழுவ அவர் தைரியத்தைக் கொடுக்கிறார்.