பெருமை கனவீனத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நார்வேயில் உள்ள ஒருவன் அறிந்துகொண்டான். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கார்ஸ்டன் வார்ஹோல்முவிடம், ஓடுவதற்கு ஏற்ற உடைகள் கூட அணியாத ஒருவன் தன்னுடன் போட்டிப்போடும்படி, திமிராகச் சவால் விடுத்தான். உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்துகொண்டிருந்த வார்ஹோம், சவாலை ஏற்று அவனைத் தோற்கடித்தார். எல்லைக்கோட்டில், தனக்குச் சரியான துவக்கம் கிடைக்கவில்லையென்றும், மீண்டும் பந்தயம் நடத்த வேண்டுமென்றும் அவன் கூறியபோது இரண்டு முறை உலக சாம்பியனான அவர் நகைத்தார்!

“மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்” என நீதிமொழிகள் 29:23-ல் நாம் வாசிக்கிறோம். நீதிமொழிகளின் புத்தகத்தில் தேவன் அகந்தை உள்ளவர்களை நடத்தும் விதத்தைப் பற்றி எழுதுவது சாலொமோனுக்கு பிடித்த ஒன்றாகும் (11:2; 16:18; 18:12). இந்த வசனங்களில் அகந்தை அல்லது இறுமாப்பு என்ற வார்த்தைக்கு ” புடைத்தல்” அல்லது “பொங்குதல்” என்று பொருள். அது தேவனுக்குரிய கனத்தை நாம் எடுத்துக்கொள்வதாகும். நாம் அகந்தைக்கொள்கையில்,  நம்மைப் பற்றி இருப்பதை விட உயர்வாக நாம் நினைக்கிறோம்.

இயேசு ஒருமுறை, “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (மத்தேயு 23:12) என்றார். அவரும், சாலொமோனும் தாழ்மையையும், பணிவையும் பின்பற்ற நம்மை நடத்துகிறார்கள். இது மாய்மாலமான தாழ்மை அல்ல, மாறாக, நம்மை சரிப்படுத்தி, நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை ஒப்புக்கொள்வதாகும்.  தன் வார்த்தைகளில் பதறாமல் (நீதிமொழிகள் 29:20) ஞானமாய் இருப்பதாகும்.

அவரைக் கனப்படுத்துவதற்கும் அவமானத்தைத் தவிர்ப்பதற்கும், நம்மைத் தாழ்த்திக்கொள்ளும் இதயத்தையும் ஞானத்தையும் நமக்குத் தரும்படி தேவனிடம் கேட்போம்.