“வாழ்க்கைக்காய் தத்தெடுக்கப்பட்டது” என்னும் புத்தகத்தில், டாக்டர். ரஸ்ஸல் மூர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்காக அனாதை இல்லத்திற்கு தனது குடும்பத்தினர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார். அவர்கள் அந்த இல்லத்திற்குள் நுழையும் போது, அங்கு நிலவிய அமைதியான சூழல் அவர்களை திடுக்கிட வைத்தது. தொட்டிலில் இருந்த குழந்தைகள் அழவில்லை. அவைகளுக்கு எதுவும் தேவையில்லை என்பதினால் அல்ல; மாறாக, அழுதாலும் யாரும் அவர்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை அவைகள் நன்று அனுபவித்திருந்தன என்பதினால் அமைதி காத்தனர்.
அந்த வார்த்தைகளை வாசிக்கையில் என் மனம் வலித்தது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த எண்ணற்ற இரவுகள் எனக்கு நினைவிருக்கிறது. “அப்பா, எனக்கு உடம்பு சரியில்லை!” அல்லது “அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது!” என்று சொன்னமாத்திரத்தில் எங்களில் ஒருவர் செயலில் இறங்கி, அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர்களின் படுக்கையறைக்குச் சென்றது நினைவிருக்கிறது. எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்குள்ள அன்பு, அவர்களுடைய தேவையில் அவர்கள் எங்களை அழைப்பதற்கான காரணத்தை கொடுத்தது.
பெரும்பாலான சங்கீதங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்ட அழுகைகளையும் புலம்பல்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களுடனான தனிப்பட்ட உறவின் அடிப்படையில் இஸ்ரவேல் தங்கள் புலம்பல்களை தேவனிடத்தில் கொண்டுவந்தது. தேவன் தன்னுடைய “சேஷ்டபுத்திரன்” (யாத்திராகமம் 4:22) என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய தேவைகளை தகப்பனிடத்தில் கொண்டுவந்தனர். இத்தகைய நேர்மையான நம்பிக்கை சங்கீதம் 25-ல் காணப்படுகிறது: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்… என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” பராமரிப்பாளரின் அன்பில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமே அழுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகளாக, தேவனின் பிள்ளைகளாக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கான காரணத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறபடியால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார், நம்மை பாதுகாக்கிறார்.
உங்கள் அழுகையை தேவனிடம் கொண்டு செல்வது எவ்வளவு வசதியாக இருக்கிறது? ஏன்? இன்று நீங்கள் எவ்வாறு உங்களின் புலம்பலை முன்வைக்கலாம்?
பரலோகத் தகப்பனே, என் அழுகையைக் கேட்டுச் செயல்படும் உம்முடைய உண்மைத்தன்மைக்கு நன்றி.