மத்திய கிழக்கு தேசங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த ரேசா ஒரு வேதாகமத்தை பரிசாய் பெற்றுக்கொண்டபோது, அவர் இயேசுவை விசுவாசிக்கத் துவங்கினார். “என்னை உம்முடைய வேலையாளாய் பயன்படுத்தும்” என்பதே அவருடைய முதல் ஜெபமாய் இருந்தது. அவர் முகாமை விட்டு வெளியேறிய பின்னர், அவர் எதிர்பாராத விதமாக ஒரு நிவாரண நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது தேவன் அவருடைய அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் அறிந்த மற்றும் நேசித்த மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் முகாமுக்குத் திரும்பினார். அவர் விளையாட்டுக் கழகங்கள், மொழி வகுப்புகள், சட்ட ஆலோசனைகள் என்று “மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அனைத்தையும்” ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இந்த திட்டங்களை அவர் பார்க்கிறார்.
அவரது வேதாகமத்தைப் படித்தபோது, ரேசா ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் சம்பவத்தோடு தனக்கான தொடர்பை உணர்ந்தார். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவர் கவனித்தார். தேவன் யோசேப்புடன் இருந்ததால், அவர் அவனுக்கு இரக்கம்பாராட்டி தயவு காண்பித்தார். சிறைச்சாலைக்காரன் யோசேப்பின் காரியங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப்பண்ணினார் (ஆதியாகமம் 39:23).
தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வாக்களிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம், இடப்பெயர்வு, மனவேதனை அல்லது துக்கம் போன்ற சிறைச்சாலை அனுபவங்களுக்குள் நாம் கடந்துவந்தாலும், அவர் நம்மை விட்டு விலகமாட்டார் என்று நம்பலாம். முகாமில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய ரேசாவுக்கும், சிறைச்சாலையை கண்காணிக்க யோசேப்புக்கும் தேவன் உதவியது போல, அவர் எப்போதும் நம்மோடே கூட இருக்கிறார்.
ரேசா மற்றும் யோசேப்பு போன்று தேவனுடைய மீட்பின் செயல்பாட்டை நீங்கள் எப்போது அனுபவித்தீர்கள்? யோசேப்பின் சம்பவம் தேவனை மேலும் விசுவாசிப்பதற்கு நமக்கு எப்படி உதவுகிறது?
இரட்சிக்கும் தேவனே, நான் கடினமாக பாதையில் நடக்கும்போதும் நீர் என்னைக் கைவிடுவதில்லை. உம்மை நம்புவதற்கும் என் வாழ்க்கையில் உம்முடைய கிரியையை சாட்சியிடவும் எனக்கு உதவிசெய்யும்.