நண்பரிடமிருந்து வந்த புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன! அவரது மனைவிக்கு ஒரு ஆச்சரியமான பரிசை அவர் கொடுத்திருக்கிறார். அது ஒரு சீரமைக்கப்பட்ட சொகுசு கார் பரிசு. புத்திசாலித்தனமான, அடர் நீல வெளிப்புறம்,பிரகாசமான குரோம் விளிம்புகள், மறுஉருவாக்கம் செய்யப்பட்ட கருப்பு உட்புறம், மற்ற மேம்படுத்தல்களுடன் பொருந்தக்கூடிய மோட்டார் ஆகியவைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதே வாகனத்தின் முந்தைய புகைப்படங்களும் இருந்தன. அதில் மந்தமான, தேய்ந்த, ஈர்க்க முடியாத மஞ்சள் பதிப்பு ஆகியவைகள் பழமையான காட்சியளித்தன. கற்பனை செய்வது கடினமாக இருந்தாலும், புதுப்பிக்கப்பட்ட வாகனம் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அது நிச்சயமாய் கண்ணைக் கவரக்கூடியதாய் இருந்தது. அதை புதிதாக்குவதற்கு நேரம், தேய்மான மாற்றம் போன்ற பிற காரணிகளும் அவசியப்பட்டது.
மீண்டு வருவதற்கு காத்திருத்தல்! இதுவே சங்கீதம் 80இல் இடம்பெற்றிருக்கும் கர்த்தருடைய ஜனத்தின் வேண்டுதலாய் இருந்தது. அவர்கள் “சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (வச. 3; 7,9ஐ பார்க்கவும்) என்று தொடர்ந்து விண்ணப்பம்பண்ணினர். அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து மீட்கப்பட்டு செழிப்பான தேசத்தில் நாட்டப்பட்டாலும் (வச. 8-11), அவர்கள் தற்போது ஆசீர்வாதத்தை இழந்து காணப்பட்டனர். அவர்களின் முரட்டாட்டத்தினிமித்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கரம் அவர்கள் மீது ஓங்கியிருந்தது (வச. 12-13). ஆகையினால் அவர்கள், “சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்” (வச. 14) என்று கெஞ்சுகின்றனர்.
நீங்கள் எப்போதாவது மந்தமாக, தூரமாக அல்லது தேவனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? மகிழ்ச்சியான ஆத்ம திருப்தி உங்களுக்கு இல்லையா? இயேசுவுடனும் அவருடைய சித்தத்துடனும் ஒத்துபோகாததால் அப்படி எண்ணுகிறீர்களா? மீண்டு வருவதற்கான நமது ஜெபங்களை தேவன் கேட்கிறார் (வச. 1). தேவனிடத்தில் அதை விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு எது தடையாய் இருக்கிறது?
தேவனின் மறுசீரமைப்பு, புத்துயிர் அளிக்கும் கிரியையை நீங்கள் எப்போது அனுபவித்தீர்கள்? உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிகளுக்கு இப்போது மறுசீரமைக்கப்படுதல் தேவை?
தகப்பனே, உமது மறுசீரமைப்பிற்காக நான் ஏங்குகிறேன். அதற்கான எனது தேவையை உணரவும் அதைப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு கிருபை தாரும்.