பன்னிரண்டு வயதான லீஅடியானெஸ் ரோட்ரிகஸ்-எஸ்பாடா, 5-கே ஓட்டத்திற்கு (3 மைல்களுக்கு மேல்) தாமதமாகிவிடுமோ என்று கவலைப்பட்டார். அரை-மாரத்தானில் பங்கேற்பாளர்களுடன் (13 மைல்களுக்கு மேல்!) அவள் தொடங்கும் நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே, ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவுடன் கிளம்பினாள். லீஅடியானெஸ் மற்ற ஓட்டப்பந்தய வீரர்களோடு ஓடுக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு சிறிது முன்னிலையில் இருந்தாள். நான்காவது மைலில், இறுதிக்கோடு அவளுடைய கண்களுக்கு தென்படாததால், அவள் நீண்ட மற்றும் கடினமான பந்தயத்தில் பங்கேற்றிருப்பதாக உணர்ந்தாள். அவள் ஆட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். இந்த திடீர் ஓட்டப்பந்தய வீராங்கணை தனது 13.1-மைல் பந்தயத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை நிறைவுசெய்த 2,111 பேர்களில் 1,885வது இடத்தைப் பிடித்தார். இதுவே விடாமுயற்சி!

ஆதித்திருச்சபை முதலாம் நூற்றாண்டில் உபத்திரவத்தை சந்தித்தபோது, பல கிறிஸ்தவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஓடும்படிக்கு யாக்கோபு அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் சோதனையை பொறுமையோடே சகித்தால், தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார் (யாக்கோபு 1:4,12). முதலாவதாக, “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (வச. 4). இரண்டாவது, இம்மையிலும் மறுமையிலும் வாழும் வாழ்க்கையில் தேவனுடைய மகிமையில் இருக்கும் வாய்ப்பான ஜீவக்கிரீடத்தை தருவேன் என்று வாக்குப்பண்ணுகிறார் (வச. 12).

கிறிஸ்தவ ஓட்டத்தின் இடையில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஓட்டத்தின் கடினத்தை உணர்ந்து இது தங்களுக்கான ஓட்டமில்லை என்று ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால் தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், நாம் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.