பிலிப்பின் தந்தை கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் வாழ்ந்தார். சிண்டியும் அவளது இளம் மகன் பிலிப்பும் அவரை ஒரு நாள் முழுவதும் தேடினர். பிலிப் அவரது நலனில் அக்கறை கொண்டிருந்தான். அவன் தனது அம்மாவிடம், தனது தந்தையையும் சேர்த்து, வீதியில் வசிக்கும் மக்கள் உஷ்ணமாய் இருக்கிறார்களா என்று கேட்டான். அந்த கேள்விக்கு பதிலாக, அப்பகுதியில் உள்ள வீடற்ற மக்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர் காலநிலை உபகரணங்களை சேகரித்து விநியோகிக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கினர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, சிண்டி அதை தனது வாழ்க்கையின் முக்கிய வேலையாகக் கருதினாள். உறங்குவதற்கு ஒரு சூடான இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய அவளை தூண்டியதற்காக தனது மகனுக்கும், தேவன் மீதான அவளுடைய ஆழ்ந்த நம்பிக்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மற்றவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வேதாகமம் நீண்ட காலமாக நமக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில், போதுமான பொருளாதாரம் இல்லாதவர்களுடன் நமது தொடர்புகளை வழிநடத்துவதற்கான கொள்கைகளின் தொகுப்பை மோசே பதிவு செய்கிறார். மற்றவரின் தேவைகளை சந்திப்பதற்கு நாம் தூண்டப்பட்டால், நாம் “அதை ஒரு வணிக ஒப்பந்தம் போல் கருதக்கூடாது.” மேலும் அதில் எந்த ஆதாயமும் லாபத்தையும் நாம் எதிர்நோக்கக்கூடாது (யாத்திராகமம் 22:25). ஒரு நபரின் வஸ்திரத்தை அடைமானமாய் எடுத்துக் கொண்டால், அது சூரிய அஸ்தமனத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். ஏனெனில் அந்த ஆடை மட்டுமே அவர்களிடம் இருக்கக்கூடிய சொத்து. அது இல்லாமல் அவர்கள் எவ்வாறு தூங்குவார்கள்? (வச. 27).
துன்பப்படுபவர்களின் வலியை நாம் எவ்வாறு குறைக்கலாம் என்பதைப் பார்க்க நம் கண்களையும் இதயங்களையும் திறக்கும்படி தேவனிடம் கேட்போம். சிண்டி மற்றும் பிலிப் போன்று பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும் அல்லது ஒரு தனி நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும், அவர்களை கண்ணியத்துடனும் அக்கறையுடனும் நடத்துவதன் மூலம் நாம் அவரை கனப்படுத்துகிறோம்.
மற்றவர்கள் மூலம் உங்கள் தேவைகளை தேவன் எவ்வாறு பூர்த்தி செய்துள்ளார்? யாருடைய தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்ய முடியும்?
பரலோக பிதாவே, தயவுசெய்து மற்றவர்களின் தேவைகளுக்கு என் கண்களைத் திறந்தருளும்.