“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2).
பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.
இன்று நீங்கள் எந்த நடைமுறை வழியில் இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள்? அவருடைய அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த வாரம் நீங்கள் என்ன செய்யலாம்?
இயேசுவே, பரலோகத்தில் என் நித்திய வீட்டிற்கு செல்லும் வழியாய் இருப்பதற்கு நன்றி. இன்று உமது ஒளியால் என்னை வழிநடத்தும்!