நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார்.
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13).
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார்.
தேவன் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை என்பதை நீங்கள் எப்பொழுது தெளிவாக உணர்ந்தீர்கள்? உங்கள் தற்போதைய சூழ்நிலையில் அவருடைய மாறாத அன்பு எப்படி உங்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது?
தகப்பனே, உம்முடைய நிலையான அன்புக்கும் பிரசன்னத்திற்கும் உமக்கு நன்றி.