“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார்.
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.
நீங்கள் என்ன பாரபட்சங்களை எதிர்கொண்டீர்கள் அல்லது எந்தெந்த பாரபட்ச உணர்வுகளும் போராடியிருக்கிறீர்கள்? இயேசுவின் அன்பு அவைகளை எப்படி சமாளிக்க உதவியது?
அன்பான தேவனே, எனக்கு இருக்கும் பாரபட்ச உணர்வுகளை மேற்கொள்ளவும் உம்மால் மட்டுமே கொடுக்க முடிந்த அன்பைக் கொண்டு மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவிசெய்யும்.