சிறந்த வணிக நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற குணங்கள் அல்ல. ஆனால் தொழில்முனைவோர் ஜேம்ஸ் ரீயின் கூற்றுப்படி, அவைகள் தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும் என்கிறார். நிதி அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரீயின் அனுபவத்தில், அவர் “நல்லெண்ணம்” – “இரக்கம் காண்பிக்கும் குணம்” மற்றும் கொடுக்கும் மனப்பான்மை போன்றவைகளே அந்த நிறுவனத்தை விளிம்பு நிலையிலிருந்து மாற்றி வளர்ச்சியின் பாதையில் கொண்டுவந்தது என்கிறார். இந்த குணங்களை மையப்படுத்துவது மக்களுக்கு ஒருங்கிணைக்கவும், புதுமைப்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. ரீ சொல்லும்போது, “நல்லெண்ணம் என்பது ஒரு உண்மையான சொத்து. அது திரளாய் பெருகக்கூடிய சுபாவம் கொண்டது” என்கிறார்.
அன்றாட வாழ்க்கையிலும், மற்ற காரியங்களோடு ஒப்பிடும்போது, இரக்கம் போன்ற குணங்களை தெளிவற்ற மற்றும் அற்பமானதாக நினைப்பது இயல்பு. ஆனால் இத்தகைய குணங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை என்று அப்போஸ்தலர் பவுல் நமக்கு கற்பிக்கிறார்.
புதிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் முதிர்ச்சி பெற்ற அங்கத்தினர்களாய் அவர்களை மறுரூபமடையச்செய்வதே ஆவியின் செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:15). அதற்காக ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் மற்றவர்களை எடுப்பித்து கட்டுகிற வகையில் இருந்தால் அது மதிப்பு மிக்கதாய் இருக்கும் (வச. 29). இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பு ஆகியவைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்துவதின் மூலமே கிறிஸ்துவில் மறுரூபமாக்கும் அனுபவத்திற்குள் நாம் வரமுடியும் (வச. 32).
பரிசுத்த ஆவியானவர் நம்மை மற்ற கிறிஸ்தவர்களிடத்திற்கு வழிநடத்தும்போது, நாம் ஒருவரையொருவர் பார்த்து கற்றுக்கொள்ளும்போது நாம் வளர்ந்து முதிர்ச்சியடைகிறோம்.
நல்லெண்ணத்தின் உறுதியான தாக்கத்தை நாம் ஏன் அடிக்கடி பார்க்கத் தவறுகிறோம் என்று நினைக்கிறீர்கள்? இரக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் நீங்கள் எவ்வாறு வளரலாம்?
அன்பான தேவனே, உமது குமாரன் மூலம் பொழிந்த அன்பு உண்மையில் முக்கியமானது என்பதை தினமும் எனக்குக் கற்றுக்கொடுங்கள்.