ஒன்பது வயது நிரம்பிய மகேஷ், தனது நெருங்கிய நண்பன் நிலேஷுடன் அவர்களது வகுப்பு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்தான். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார், மகேஷைப் பார்த்தபோது, “போதுமான நாற்காலிகள் இல்லை,” என்று சொல்லி அவனை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. ஏழையாகத் தோற்றமளித்த தனது நண்பருக்கு இடம் கொடுக்க தரையில் உட்கார நிலேஷ் முன்வந்தான். ஆனால் அந்த பெண்மணி அதையும் அனுமதிக்கவில்லை. மனச்சோர்வடைந்த நிலேஷ், கொண்டுவந்த பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, மகேஷுடன் வீடு திரும்பினான். இந்த நிராகரிப்பை அவனுடைய இதயம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த சம்பவம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலேஷ் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவர் தனது வகுப்பறையில் ஒரு காலி நாற்காலியை வைத்திருக்கிறார். ஏன் என்று மாணவர்கள் கேட்டால், “யாருக்கும் வகுப்பறையில் எப்பொழுதும் இடமளிக்க வேண்டும்” என்பது தனது நினைவூட்டல் என்று அவர் விளக்குகிறார்.

எல்லா மக்களையும் நேசிக்கும் இயேசுவின் இருதயத்தை அவருடைய வாழ்க்கையில் நாம் காணக்கூடும்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் (மத்தேயு 11:28). இந்த அழைப்பு “முதலாவது யூதருக்கு” (ரோமர் 1:16) என்னும் இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தெரியலாம். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பு என்னும் பரிசு கொடுக்கப்படுகிறது. “விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை” (3:22) என்று பவுல் சொல்லுகிறார்.

அனைவருக்குமான கிறிஸ்துவின் அழைப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29). அவரது இளைப்பாறுதலை நாடும் அனைவருக்காகவும் அவர் திறந்த மனதுடன் காத்திருக்கிறார்.