சமீபத்தில் விதவையான பெண் ஒருவள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தாள். இன்சூரன்ஸ் பாலிசியில் இருந்து சில முக்கிய நிதிகளைச் சேகரிக்க, கணவரின் உயிரைப் பறித்த விபத்து பற்றிய முக்கிய தகவல்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவள் பேசினாள். ஆனால் அவள் அவருடைய முகவரி அட்டையை தொலைத்துவிட்டாள். அதனால் அவள் உதவிக்காக தேவனிடம் மன்றாடி ஜெபித்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் தேவாலயத்தின் வெளிப்புறமாக நடந்துசென்றுகொண்டிருக்கையில் தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றில் ஒரு முகவரி அட்டையைப் பார்த்தாள். ஆம், அவள் தொலைத்த அதே போலீஸ்காரரின் அட்டை. அது எப்படி அங்கு வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஏன் அங்கு வந்தது என்பது அவளுக்குத் தெரியும்.
அவள் ஜெபத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டாள். ஏன் கூடாது? தேவன் நம் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கிறார் என்று வேதம் கூறுகிறது. பேதுரு சொல்லும்போது “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதல்களுக்குக் கவனமாயிருக்கிறது” (1 பேதுரு 3:12) என்று கூறுகிறார்.
ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதிலளித்தார் என்பதற்கு வேதாகமம் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. அதில் வியாதிப்பட்ட யூதேயாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் ஒருவர். அவர் மரித்துவிடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசியே தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டார். ஆனால் ராஜாவோ என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தான். “அவன் கர்த்தரை நோக்கி… விண்ணப்பம்பண்ணினான்” (2 இராஜ. 20:2). உடனே தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கி, “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” (வச. 5) என்று அவனிடம் சொல்லும்படிக்கு சொன்னார். எசேக்கியாவுக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆயுள் கூட்டப்பட்டது.
ஜன்னலில் அட்டை தென்பட்டதுபோல தேவன் எப்போதும் நமக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் கடினமான சூழ்நிலைகள் எழும்போது, அவற்றை நாம் தனியாக எதிர்கொள்ள மாட்டோம் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். தேவன் நம்மைப் பார்க்கிறார், அவர் நம்முடன் இருக்கிறார் – நம் ஜெபங்களைக் கேட்கிறார்.
உங்கள் கவலைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எது? தேவனுடைய வழிகாட்டுதலையும் உதவியையும் பெறுவதற்க அவற்றை எவ்விதம் தேவனிடத்தில் விண்ணப்பிப்பீர்கள்?
தகப்பனே, என்னோடு இருந்து என் விண்ணப்பத்திற்கு பதில்கொடுத்ததற்காய் உமக்கு நன்றி.