அலுவலக கட்டிடத்தின் படிக்கட்டில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. படிக்கட்டுகள் சுழல்வது போல் தெரிந்ததால், நான் விரக்தியடைந்து, படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தேன். என் இதயம் துடித்ததும், என் கால்கள் தளர்ந்ததும், நான் அந்த படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டேன். அதன் வலிமைக்காய் நன்றிசெலுத்தினேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. அதன் விளைவு ஆபாயகரமானது இல்லை என்றாலும், அதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்றாலும், அன்று நான் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தேன் என்பதை என்னால் மறக்கவே முடியாது.

அதனால்தான் இயேசுவைத் தொட்ட பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவள் பலவீனமான நிலையில் கூட்டத்தினூடாக நகர்ந்தது மட்டுமல்லாமல், அவரை அணுகுவதற்கான முயற்சியில் நம்பிக்கையையும் காட்டினாள் (மத்தேயு 9:20-22). அவள் பயப்படுவதற்கு சரியான காரணம் இருந்தது. யூதச் சட்டம் அவளை தீட்டாகவும், அந்த தீட்டை அவள் வெளிப்படையாய் காண்பித்தால், அதின் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அவள் சந்திக்க நேரிடும் (லேவியராகமம் 15:25−27). ஆனால் நான் அவருடைய அங்கியைத் தொட்டால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு உறுதியாய் இருந்தது. மத்தேயு 9:21-ல் “தொடுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது வெறும் தொடுதல் அல்ல, மாறாக “ பற்றிப் பிடித்துக்கொள்வது” அல்லது “தன்னை இணைத்துக் கொள்வது” என்ற வலுவான பொருளைக் கொண்டுள்ளது. அந்தப் பெண் இயேசுவை இறுகப் பற்றிக்கொண்டாள். அவரால் அவளை குணப்படுத்த முடியும் என்று அவள் நம்பினாள்.

ஜனக்கூட்டத்தின் நடுவே, ஒரு பெண்ணின் மேலான விசுவாசத்தை இயேசு கண்டார். நாமும் விசுவாசத்தில் துணிந்து, நம்முடைய தேவையில் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை வரவேற்று, நமக்கு உதவிசெய்வார். நிராகரிப்பு அல்லது தண்டனைக்கு பயப்படாமல் நம் கதையை அவரிடம் சொல்லலாம். “என்னைப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று இயேசு இன்று நமக்குச் சொல்கிறார்.