நீங்கள் எப்போதாவது ஒரு கண்காட்சி விற்பனையில் குறைந்த விலை பொருட்களை வாங்கி, அது நம்பமுடியாத விலைமதிப்புள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? கனெக்டிகட்டில் நடந்த ஒரு மலர் வடிவம்கொண்ட சீன பழங்கால கிண்ணம் வெறும் 35 டாலருக்கு (சுமார் 2800 ரூபாய்) வாங்கப்பட்டது. அதே கிண்ணம், 2021 ஏலத்தில் 700,000 டாலருக்கு (கிட்டத்தட்ட 6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது. இந்த கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளாக மாறியது. சிலர் சிறிய மதிப்புடையதாகக் கருதுவது உண்மையில் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம். 

உலகம் முழுவதும் பரவியுள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது, பேதுரு இயேசுவின் மீதான அவர்களின் நம்பிக்கை எல்லா கலாச்சாரத்தினராலும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீதான நம்பிக்கை என்று விளக்குகிறார். பெரும்பாலான யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டு, ரோமானிய அரசாங்கத்தால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றாததால், பலரால் பிரயோஜனமற்றவராகக் கருதப்பட்டார். ஆனால் மற்றவர்கள் இயேசுவின் மதிப்பை நிராகரித்தபோதிலும், அவர் “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய” (1 பேதுரு 2:4) மதிப்புமிக்கவராய் திகழ்ந்தார். நமக்கான அவரது மதிப்பு வெள்ளி அல்லது தங்கத்தைவிட விலையேறப்பெற்றது (1:18-19). மேலும், இயேசுவை நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கும் எவரும் தங்கள் விருப்பத்தைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது (2:6).

மற்றவர்கள் இயேசுவை மதிப்பற்றவர் என்று நிராகரிக்கும்போது, நாம் வேறுவிதத்தில் பார்ப்போம். கர்த்தருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பரிசைக் காண நமக்கு உதவுவார். அவர் தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் மாறுவதற்கான விலைமதிப்பற்ற அழைப்பை எல்லாருக்கும் கொடுக்கிறார் (வச. 10).