மகோடோ ஃபுஜிமுரா என்னும் புகழ்பெற்ற கலைஞரின் பிரபல புத்தகமான “கலை + விசுவாசம்: இறையியல் ஆக்கம்” (Art + Faith: A Theology of Making) என்ற புத்தகத்தில், ஜப்பானியர்களின் தொன்மையான கிண்ட்சுகி மண்பாண்டக்கலையைக் குறித்து விவரிக்கிறார். அதில், கலைஞர் உடைந்த மட்பாண்டங்களை (முதலில் தேநீர் பாத்திரங்கள்) எடுத்து, துண்டுகளை மீண்டும் அரக்குடன் சேர்த்து, விரிசல்களில் தங்கத்தை இழைக்கிறார். “இந்த கிண்ட்சுகி பாத்திரங்கள் உடைந்த பாத்திரங்களை சரிசெய்வதோடல்லாது, அது முன்பிருந்த அழகைக்காட்டிலும் அதிக அழகாய் மாற்றுகிறது” என்று சொல்லுகிறார். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு போர்வீரனின் உடைந்துபோன விருப்பமான கோப்பையை அழகாக மீட்டெடுத்த முயற்சியிலிருந்து இந்த கலை தோன்றியது. பின்னர் இது மிகவும் மதிப்புமிக்க விரும்பமான கலையாக மாறியது.

இந்த வகையான மறுசீரமைப்பை கலைநயத்துடன் தேவன் உலகத்தில் செயல்படுத்துவதை ஏசாயா விவரிக்கிறார். நாம் நமது கிளர்ச்சியால் உடைந்து, நமது சுயநலத்தால் சிதைந்தாலும், தேவன் “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (65:17) என்று வாக்குப்பண்ணுகிறார். அவர் பழைய உலகத்தை பழுதுபார்ப்பது மட்டுமல்லாமல், அதை முற்றிலும் புதியதாக மாற்றவும், நமது உடைந்த வாழ்க்கையை எடுத்து, புதிய அழகுடன் மின்னும் உலகத்தை வடிவமைக்கவும் திட்டமிடுகிறார். மேலும் அந்த புதிய வாழ்க்கையில் “முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு,” “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை” (வச. 16-17). இந்த புதிய சிருஷ்டிப்பின் மூலம் தேவன் நம்முடைய தவறுகளை மூடிமறைக்கப்போவதில்லை; மாறாக, அசிங்கமான விஷயங்களை அழகாகவும், செத்த காரியங்களை மீண்டும் சுவாசிக்கசெய்யும் படைப்பாற்றலையும் கட்டவிழ்ப்பார். 

நம்முடைய சிதைந்துபோன வாழ்க்கையைக் குறித்த நாம் கவலைப்பட தேவையில்லை. தேவன் தன்னுடைய அழகான மறுசீரமைத்தலை செயல்படுத்துகிறார்.