1950களில் ஒரு ஒற்றைத் தாய் தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேலை தேட வேண்டியிருந்தபோது, அவருக்கு தட்டச்சு வேலை கிடைத்தது. ஒரே பிரச்சினை என்னவென்றால், அவள் நேர்த்தியாய் தட்டச்சு செய்பவள் அல்ல; தொடர்ந்து தவறுகளைச் செய்தாள். அவள் தனது பிழைகளை மறைப்பதற்கான வழிகளைத் தேடினாள். இறுதியில் தட்டச்சுப் பிழைகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெள்ளைத் திருத்த திரவமான, திரவக் காகிதம் என்று அழைக்கப்படும் ஒன்றை கண்டுபிடித்தாள். அது காய்ந்ததும், பிழைகள் இல்லாதது போல் வெண்மையான பின்பு, மீண்டும் அதின் மீது புதிதாய் தட்டச்சு செய்யமுடியும். 

நம்முடைய பாவத்தை சமாளிக்க நேர்த்தியான சக்திவாய்ந்த வழியை இயேசு நமக்கு கொடுக்கிறார். மூடிமறைத்தல் இல்லை, அது முழுமையான மன்னிப்பு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் யோவான் 8 ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் விபச்சார பாவத்தில் சிக்கிய ஒரு ஸ்திரீயின் சம்பவத்திலிருந்து காட்டப்படுகிறது (வச. 3-4). அந்த ஸ்திரீக்கும் அவள் செய்த பாவங்களுக்கும் இயேசு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்கிருந்த நியாயதிபதிகள் விரும்பினர். அவள் கல்லெறியப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் இயேசு நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து சற்றும் யோசிக்கவில்லை. மாறாக, எல்லாரும் பாவம் செய்தவர்கள் தான் என்று (ரோமர் 3:23ஐப் பார்க்கவும்), உங்களில் பாவமில்லாதவன் அந்த ஸ்திரீயின் மீது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று சொல்லுகிறார். ஒரு கல்லும் எறியப்படவில்லை. 

இயேசு அவளுக்கு ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அவர் குற்றவாளியாய் தீர்க்கவில்லை என்று சொல்லி, “இனிப் பாவஞ்செய்யாதே” (வச. 11) என்று சொல்லுகிறார். அவளுடைய பாவ வாழ்க்கைக்கான் தீர்வையும், இனி அவள் பாவம் செய்யாமல் வாழும் வாழ்க்கைக்கான புதிய துவக்கத்தையும் இயேசு அருளுகிறார். அவருடைய கிருபையினாலே அந்த வாய்ப்பை தேவன் நமக்கும் அருளுகிறார்.