2021 ஆம் ஆண்டில், வரலாற்றில் இதுவரை அம்பு எய்தவர்களைவிட அதிக தொலைவில் அம்பு எய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு பொறியாளர் 2,028 அடி சாதனையை இலக்காகக் கொண்டார். ஒரு உப்புத் தட்டில் படுத்துக்கொண்டு, அவர் பிரத்யேகமாய் வடிவமைத்த கால் வில்லின் நாண்களை இழுத்து, ஒரு மைலுக்கும் (5,280 அடி) புதிய சாதனைத் தூரம் இருக்கும் என்று அவர் நம்பும் அளவிற்கு அம்பை ஏவத் தயார் செய்தார். ஆழமாக மூச்சை இழுத்து அம்பை எய்தார். அது ஒரு மைல் கூட பயணிக்கவில்லை. உண்மையில், அது ஒரு அடிக்கும் குறைவாகவே பயணித்தது. அவரது காலில் பட்டு, கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஐயோ!
சில சமயங்களில் தவறான லட்சியத்துடன் நம்முடைய காலில் நாமே காயத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். யாக்கோபுக்கும் யோவானுக்கும் நல்லதை லட்சியமாக தேடுவது என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தவறான காரணங்களுக்காக. “உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும்” (மாற்கு 10:37) என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்” (மத்தேயு 19:28) என்று பதிலளிப்பதின் மூலம் அவர்கள் ஏன் இந்த கேள்வியை கேட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பிரச்சனை என்ன? அவர்கள் கிறிஸ்துவின் மகிமையில் தங்களுடைய சுயநலமான பதவியின் ஸ்தானத்தை ஸ்தாபிக்க முயற்சித்தனர். மேலும் இயேசு அவர்களிடம் நீங்கள் கேட்கிறது இன்னதென்று உங்களுக்கு தெரியவில்லை என்றும் (மாற்கு 10:38), “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43) என்றும் சொல்லுகிறார்.
நான் கிறிஸ்துவுக்காய் நன்மையும் மேன்மையுமான காரியங்களை செய்வதற்கு பிரயாசப்படும்போது, இயேசு செய்ததுபோல மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்யும் ஞானத்தையும் வழிநடத்துதலையும் நாடமுடியும்.
நம்முடைய இலக்கு ஏன் நன்மையாகவும் தீமையாகவும் இருக்கக்கூடும்? இயேசுவுக்கு ஊழியம்செய்யும்பொருட்டு நம்முடைய நோக்கத்தை அமைத்துக்கொள்வது எப்படி?
இயேசுவே, சரியான நோக்கத்துடன் உமக்காய் பெரிய காரியங்களை செய்ய ஆசைப்படுகிறேன்.