தங்களின் வாழ்நாள் சுற்றுப்பயணத்திற்கு பணம் திரட்டிய அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா உயர்நிலைப் பள்ளியின் படித்த முதியவர்கள் குழு, விமான நிலையத்திற்கு வந்தபிறகு தான் அவர்களில் பலர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர் என்பதை அறிந்துகொண்டனர். “இது மனதிற்கு வேதனையளிக்கிறது” என்று ஒரு பள்ளி நிர்வாகி கூறினார். இதினிமித்தம் அவர்கள் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தாலும், அந்த சூழ்நிலையை அவர்கள் சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தனர். டிக்கெட்டுகளை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கிய அருகிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இரண்டு நாட்கள் அவர்கள் மகிழ்ந்திருந்தனர்.
தோல்வியுற்ற அல்லது மாற்றப்பட்ட திட்டங்களைக் கையாள்வது சற்று ஏமாற்றமாகவும், இருதயத்தை உடைக்கக்கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக நேரத்தையோ, பணத்தையோ அல்லது உணர்ச்சியையோ திட்டமிடுதலில் முதலீடு செய்தவர்களுக்கு இது அதிக வேதனையளிக்கக்கூடியது. தாவீது ராஜா தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று தன் மனதிலே நினைக்கிறான் (1 நாளாகமம் 28:2). ஆனால் தேவன் அவரிடம் “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்… உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்” (வச. 3,6) என்று சொல்கிறார். தாவீது விரக்தியடையவில்லை. இஸ்ரவேலின் ராஜாவாக தேவன் அவரை தேர்வுசெய்ததற்காய் தேவனை துதிக்கிறார். மேலும் ஆலயத்தை கட்டுவதற்கு தேவன் சாலொமோனுக்குத் திட்டங்களைக் கொடுத்தார் (வச. 11-13). தாவீது சாலெமோனைப் பார்த்து, “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; தேவனாகிய கர்த்தர் … உன்னோடே இருப்பார்” (வச. 20) என்று ஊக்கப்படுத்துகிறார்.
நம்முடைய திட்டங்கள் தோல்வியுறும்போது, அது எந்த பிரச்சனையாயிருந்தாலும் நம்முடைய தேவன் “உங்களை விசாரிக்கிறவரானபடியால்” (1 பேதுரு 5:7) நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடுவோம். நம்முடைய கவலைகளை கிருபையோடு கையாளுவதற்கு அவர் நமக்கு உதவிசெய்வார்.
நீங்கள் தீட்டிய திட்டம் எப்போது தோல்வியடைந்திருக்கிறது? உங்கள் ஏமாற்றத்தைச் சமாளிக்க எது உங்களுக்கு உதவியது?
அன்பான தேவனே, உமது வாக்குறுதிகளும் திட்டங்களும் ஒருபோதும் தோல்வியடையாது என்பதற்காய் உமக்கு நன்றி. என்னுடைய திட்டங்கள் தோல்வியுறும்போது எனக்கு உதவிசெய்யும்.