ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ (1807-1882) என்ற கவிஞரின் “சாட்சிகள்” என்ற கவிதைத் தொகுப்பில், மூழ்கிய அடிமைக் கப்பலை குறித்து விவரிக்கிறார். “சங்கிலியில் உள்ள எலும்புக்கூடுகள்” பற்றி அவர் எழுதியது போல், லாங்ஃபெலோ அடிமைத்தனத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட எண்ணற்ற பெயர் தெரியாத நபர்களுக்காய் இரங்கல் தெரிவித்தார். கடைசி சரணத்தில், “இவை அடிமைகளின் துயரங்கள், அவைகள் ஆழத்திலிருந்து அலறுகிறது; அறியப்படாத கல்லறைகளிலிருந்து கதறுகிறது; நாங்களே அதற்கு சாட்சிகள்!” என்று முடிக்கிறார்.

ஆனால் இந்த சாட்சிகள் யாரிடம் பேசுகிறார்கள்? அத்தகைய மௌன சாட்சியம் வீண் இல்லையா?

அவையெல்லாவற்றையும் பார்க்கும் சாட்சி ஒருவர் இருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றபோது, எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்தான். “ என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று தேவனிடம் கேட்டான். ஆனால் தேவன் “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்” (ஆதியாகமம் 4:9-10) என்று சொன்னார்.

காயீனின் பெயர் இன்றும் ஒரு எச்சரிப்பின் சத்தமாகவே திகழ்கிறது. “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்” என்று சீஷனாகிய யோவான் எச்சரிக்கை விடுக்கிறார் (1 யோவான் 3:12). ஆபேலின் பெயரும் இன்றும் நிலைநிற்கிறது. ஆனால் வித்தியாசமான வழியில்! “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்… அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்” (எபிரெயர் 11:4) என்று எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் ஆபேலைக் குறித்து சாட்சிகொடுக்கிறார்.

ஆபேல் இன்னும் பேசுகிறார். அதுபோல மரித்து வெகுநாளாய் ஆன அடிமைகளின் அந்த எலும்புக்கூடுகளும் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அநீதி தழைத்தோங்குகிறதோ அங்கெல்லாம் நாம் எதிர்த்து நின்று அவர்களுக்காய் குரல்கொடுப்போம். தேவன் அனைத்தையும் பார்க்கிறார். அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.