2013 ஆம் ஆண்டில், சுமார் அறுநூறு ஆன்-சைட் பார்வையாளர்கள் கிராண்ட் கேன்யன் அருகே 1500 அடி அகலமுள்ள பள்ளத்தாக்கில் ஒரு இறுக்கமான கயிற்றின் மீது நிக் வாலெண்டா நடப்பதைக் கண்டனர். வாலெண்டா 2 அங்குல தடிமன் கொண்ட இரும்பு கயிற்றில் நடக்கையில், அவருடைய தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் அவருக்கு முன் இருந்த பள்ளத்தாக்கு தெரிகிற வேளையில் அவர் இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். அவர் அந்த பயங்கரமான பள்ளத்தாக்கில் ஒரு சாதாரண நடைபாதையில் நடப்பதுபோல் நடந்துசென்று, இயேசுவுக்கு நன்றி சொன்னார். தீடீரென்று காற்று வீச, அவர் நிலைகுலைந்து பின்பு சமநிலைப்பட்டார். காற்றில் அசைந்த அந்த கயிற்றை தேவன் சமநிலைப்படுத்தியதற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அந்த இறுக்கமான கயிற்றின் ஒவ்வொரு அடியிலும், அவர் கிறிஸ்துவின் வல்லமையை சார்ந்திருப்பதை அன்றும் இன்றும் கேட்கும் அனைவருக்கும் பிரதிபலித்தார். வீடியோ உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.
கலிலேயா கடலில் சீஷர்களின் படகை பெருங்காற்று சூழ்ந்தபோது, அவர்கள் உதவிக்காய் கதறும் அளவிற்கு பயம் அவர்களை சூழ்ந்துகொண்டது (மாற்கு 4:35-38). இயேசு சலசலப்பை அடக்கிய பிறகு, அவர் காற்றையும் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தினார் என்பதை சீஷர்கள் அறிந்தனர் (வச. 39-41). மெல்ல மெல்ல அவர் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள். அவர்களின் இந்த தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவர்கள் இயேசுவோடு நெருங்குவதற்கும் அவருடைய அசாதாரண வல்லமையை விளங்கிக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.
வாழ்க்கையின் புயல்களை நாம் சந்திக்கும்போதோ அல்லது துன்பத்தின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நீட்டிக்கப்பட்ட நம்பிக்கையின் இறுக்கமான கயிற்றில் நடக்கும்போதோ கிறிஸ்துவின் வல்லமையின் மீதான நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த முடியும். தேவன் நம்முடைய விசுவாச நடையை பயன்படுத்தி அவர் மீது நம்பிக்கை வைக்க மற்றவர்களை தூண்டுவார்.
மற்றவர்களுடைய வாழ்க்கையில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் வல்லமை உங்களுடைய விசுவாசத்தை எவ்விதம் பெலப்படுத்தியது? உறுதியான விசுவாசத்தில் நீங்கள் நடக்க ஜெபம் எந்த அளவிற்கு உதவுகிறது?
தகப்பனே, வாழ்க்கையின் புயல்போன்ற சூழ்நிலைகளில் உம்மை நம்பும்போது, என் இருதயத்தை இளைப்பாறப்பண்ணினீரே, உமக்கு நன்றி.