நீங்கள் எப்பொழுதாவது கோபத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருந்தியுள்ளீர்களா? என் மகன் போதைக்கு அடிமையாகி அதனால் போராடிக் கொண்டிருந்தபோது, அவனது விருப்பங்களுக்கு எதிராக நான் சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். என் கோபம் அப்பழக்கத்தை இன்னும் அவனுக்குள் அதிகரித்தது. ஆனால் இறுதியில் தன்னிடம் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பற்றிப் பேசிய விசுவாசிகளை சந்தித்த பின்னர், காலப்போக்கில் அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டான்.
விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர்களில் ஒருவரான மோசே கூட, கோபத்தில் ஓர் காரியத்தைச் செய்ததினால் பின்னர் வருந்த வேண்டியதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்தபோது, கசப்புடன் முறையிட்டார்கள். எனவே தேவன் மோசேக்கும், ஆரோனுக்கும் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார்: “அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்” (எண்ணாகமம் 20:8). ஆனால் மோசே அவ்வதிசயத்திற்கு காரணமான தேவனுக்கு கனத்தைக் கொடுக்காமல், தனக்கும் ஆரோனுக்கும் அதைக் கொடுத்து, கோபத்தை வெளிக்காட்டினார்: ”அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி” (வ.10). பின்னர் வெளிப்படையாகவே தேவனுக்கு அவர் கீழ்ப்படியாமல், “தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11).
என்னதான் தண்ணீர் பொங்கி வழிந்தாலும், சோகமான பின்விளைவுகள் ஏற்பட்டது. தேவன் தம் மக்களுக்கு வாக்களித்த தேசத்தில் மோசேயும், ஆரோனும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்னும் இரக்கமுடையவராக இருந்தபடியால், மோசே தூரத்திலிருந்து அதைப் பார்க்க அனுமதித்தார் (27:12-13).
மோசேக்கு இரக்கமாய் இருந்தது போலவே, தேவன் இன்னும் கீழ்ப்படியாமையின் பாலைவனத்தில் இருக்கும் நமக்கு இறங்குகிறார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், அவர் நமக்கு மன்னிப்பையும், நம்பிக்கையையும் கிருபையால் அளிக்கிறார். நாம் எங்கே இருந்திருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் அவரிடம் திரும்பும்போது, அவர் நம்மை ஜீவனுக்கேதுவாக நடத்திச் செல்வார்.
தேவன் தகுதியற்றிருந்த உங்களுக்கு எவ்வாறு கருணை காட்டினார்? இன்று ஒருவருடன் அவருடைய கருணையை நீங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளுவீர்கள்?
நன்றி அன்பான தந்தையே, கடினமான விளைவுகள் இருந்தபோதிலும், எனக்கு நீர் நித்திய நம்பிக்கையைத் தருகிறீர்.