“மாறுவேடத்தின் தலைவன்” என்பது இந்தோனேசியாவில் நீரிலும், உலகின் மிகப்பெரிய பவளப்பாறையிலும் வாழ்கிறது. இந்தப் போலியான ஆக்டோபஸ், மற்ற ஆக்டோபஸ்களைப் போலவே தன் தோலின் நிறத்தை அதன் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும். புத்திசாலித்தனமான இந்த உயிரினம் அதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில்; விஷமுள்ள சிங்கமீன்கள், கொடிய கடல் பாம்புகள் ஆகியவற்றைப் போன்று, தன் வடிவம், நகர்வு மற்றும் குணாதிசியத்தை மாற்றிக்கொள்ளும்.

இந்தப் போலியான ஆக்டோபஸ் போலல்லாமல், இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தனித்து நிற்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள, நம் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் நாம் அச்சுறுத்தப்படும் போது, அவர்களுடன் இணைந்து செயல்பட நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் அப்படிச் செய்யும் போது, தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று, “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று” (ரோமர் 12:1) நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கும்படி” (வச. 2) நமக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் நாம் தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை நம் வார்த்தையிலும், அதேபோல் நாம் செயலிலும் காட்ட வேண்டும். நாம் வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பான குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போது, அதனால் வரும் பலன்கள், எந்த இழப்பைக் காட்டிலும் எப்பொழுதும் பெரிது என்பதை நம் வாழ்வில் நிரூபிக்க முடியும். இன்று நீங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுவீர்கள்?